பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேர நாடு 21



இச் சங்க இலக்கியங்கள் பலவும் தொகைநூல்களாதலால், இவற்றில் சேர நாட்டின் வடக்கும் தெற்குமாகிய எல்லைகள் இவையென வரையறுத்தறிதற்குரிய குறிப்புகள் விளக்கமாக இல்லை. ஆயினும், தென் கன்னடம் மாவட்டத்திலுள்ள குதிரை மலையும், ஏழில் மலையும், குடகு நாட்டிலுள்ள நறவுக்கல் பெட்டா மலையும். நீலகிரியிலுள்ள உம்பற் காடும், மலையாள மாவட்டத்திலுள்ள வயநாட்டுப் (Wynad) பாயல் மலையும், குறும்பர் நாடு தாலூகாவிலுள்ள தொண்டியும், கொச்சி நாட்டிலுள்ள கருவூர்ப்பட்டினமும், திருவஞ்சைக்களமும் கொடுங்கோளூரும், பேரியாறும் பிறவும் சேரர்க்குரியவாகக் கூறப்படுகின்றன. மேலை மலைத் தொடரின் தென்கோடியில் நிற்கும் பொதியிலும் தென்குமரியும் பாண்டியர்க் குரியவாகக் குறிக்கப் படுகின்றன.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் மேலைக் கடற்கரைப் பகுதிக்கு வந்து சென்ற யவன அறிஞரான தாலமியென்பவரது குறிப்பால், அப்போது சேர நாட்டுக்கு வடக்கில் வானவாறும் (Honawar), கிழக்கில் மலையும், தெற்கில் கொல்லத்து ஆறும், மேற்கில் கடலும் எல்லைகளாக இருந்தன என ஆராய்ச்சியாளர்[1] உரைக்கின்றனர். வானவாறென்பது வட கன்னட நாட்டின் தென்கோடியில் இருக்கும் கடற்கரையூர்; வட கன்னடத்தையும் தென் கன்னடத்தையும் எல்லையாய் நின்று பிரிக்கும் ஆறு கடலோடு கலக்குமிடத்தில் வட


  1. William Logan’s Malabar. P. 254