பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக்கடுங்கோ வாழியாதன் 231



கடவுன்மங்கலம் செய்தபோது, செங்குட்டுவன் கனக விசயர் என்ற வடவேந்தர்களைச் சிறைவீடு செய்து அரசர்க்குரிய சிறப்புடன் இருக்கச் செய்தது இந்த வேண்மாடத்தேதான். இவ் வேண்மாடத்தே இருந்து போர் நிகழ்ச்சியை நோக்கியிருந்த அந்துவன், வேணாட்டிலிருந்து வந்த முடமோசியாரைத் தன்னோடே இருத்தி விருந்தாற்றினான். மேலும், அவர் சோழ நாட்டில் தோன்றிய சான்றோரதலால், அவரைக்கொண்டு சோழருடைய சிறப்பியல்புகளை அவன் அறிந்து கொள்ளுதற்கு அவரது வருகையும் உடனுறைவும் சிறந்து விளங்கின. இருவரும் வேண்மாடத்தில் இருந்து, வடமேற்கில் கடற்கரையில் படைக்கடல் காவல் புரிய விளங்கும் கருவூர் நிலையும், வஞ்சி முற்றத்தை வளைத்து நின்று காக்கும் வஞ்சிப் படை நிலையும், வடக்கிற் சேய்மையில் முற்றியிருக்கும் சோழர் பெரும்படை நிலையும் நன்கு தோன்றக் கண்டிருந்தனர். வஞ்சிமாநகர்க்குக் கண்காணும் எல்லையில் இருந்து காட்சியளித்து கருவூர், இப்போது கருவூர்ப் பட்டினமென வழங்குகிறது. மேனாட்டு யவனர்களின் குறிப்புகளில் இவ்வூர்க் குறிப்பும் உள்ளதனால், இதன் தொன்மை நன்கு தெரியப்படும்.

அந்துவனும் முடமோசியாரும் படை நிலைகளை நோக்கியிருக்கையில், சோழர் படையில் பெருங்களிறு ஒன்றின்மேல் தலைவன் ஒருவன் இருந்து படையணியை நோக்கித் திரிவதையும், அவ் யானையைச் சூழப் பரிக்கோற்காரரும் வேல் வீரரும் செல்வதையும் இருவரும் கண்டனர். சிறிது போதிற்கெல்லாம் படையில்