பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236 சேர மன்னர் வரலாறு



பரணர்க்குத் தொண்டு செய்ய விடுத்த செய்தியை ஐந்தாம்பத்தின் பதிகம் கூறிற்று.

செல்வக் கடுங்கோ அரசு கட்டில் ஏறிய சில ஆண்டுகட்குப் பின், சேர நாட்டின் வடபகுதியில் வாழ்ந்த சதகன்னர வேந்தன், வேறொரு வடநாட்டு வேந்தனைத் துணையாகக் கொண்டு தமிழ் நாட்டிற் புகுந்து குறும்பு செய்தான். இது கடுங்கோவுக்குத் தெரிந்தது. இச் செய்தியைச் சோழ பாண்டியர்கட்கு அறிவித்து, இச் செயலைப் பொருள் செய்யாது விடின், “பொதுமை சுட்டிய மூவருலகம்[1]” எனப்படும் தமிழகம் சிறப்புழியும் என்பதையும் அறிவுறுத்தினான். சின்னாட் கெல்லாம் சோழ பாண்டியர் விடுத்த பெரும்படைகள், வஞ்சி நகரிலிருந்து வடநாடு நோக்கிப் புறப்பட்டன. செல்வந் கடுங்கோ, நால்வகைத் தமிழ்ப் படையும் உடன் வரச் சேர வாறு[2] கடந்து வானவாசி நாட்டுட் புகுந்து சத கன்னர்க்குரிய நகரமொன்றை முற்றுகை செய்தான்.

தமிழ்ப்படை செறித்து முற்றியிருந்த இடம், பகைவரைத் தாக்கற்கு எளிதாயும் அப் பகைவர் முற்போந்து பொருதற்கு ஏலாததாயும் இருந்தது. பகைவரை எறிதற்கேற்ற இடங்கண்ட பின்னல்லது தமிழர் போர்வினை தொடங்கார். இதனை இடனறிதல் என்ற பகுதியில் திருவள்ளுவர் கூறுவது கொண்டு தெளியலாம். பகைவேந்தர் இருவரும் வேறு வேறு இடங்களிலிருந்து எயில் காத்து நின்றனர். நின்ற ஒவ்வொரு நாளும் தமிழ்ப்படை வந்து செறிந்த


  1. புறம். 357,
  2. சேராறு - ஷிராவதி (Sharavadi)