பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240 சேர மன்னர் வரலாறு



அந்தணர்களுக்குப் பெரும் பொருளை நீர்வார்த்துக் கொடுப்பான்; அந் நீர் ஆறாகப் பெருகியோடி அரண்மனை முற்றத்தைச் சேறாக்கிவிடும்; அம் முற்றத் திற்குள் அந்தணரும் பரிசிலரும் இரவலரும் எளிதில் புகுதல் கூடுமேயன்றிப் பகைவர் கனவினும் புகமுடியாது என்று புலவர்கள் புகழ்ந்து கூறுகின்றனர்.

இக் கடுங்கோவுக்கு இசையிலும் கூத்திலும் மிக்க ஈடுபாடு உண்டு. நகர்ப்புறத்திலிருக்கும் புறஞ்சிறைத் தெருவில் வருவது தெரியினும், கூத்தர்களை அன்போடு வருவித்து அவர்களுக்குச் செய்யப்பட்ட தேர்களையும் குதிரைகளையும் அழகுற அணிந்து நல்குவது வழக்கம்.

இத்தகைய செயல்களால், அறவேள்விகளை முன்னிருந்து செய்து முடிக்கும் வேதியர் தலைவனிலும் செல்வக் கடுங்கோவின் அறநூலுணர்வு மிக்கிருந்தது. அதற்கேற்ப அவனது உள்ளமும் வளம் பெற்றிருந்தது. அதனால் அவனது புகழ் தமிழகம் முழுவதும் நன்கு பரவியிருந்தது. நல்லொளி நிகழும் பண்பும் செய்கையும் முடையோர் எங்கே இருக்கின்றனரோ அங்கே நல்லிசைச் சான்றோர் நயந்து சென்று சேர்வது இயல்பு. அதனால் தமிழகத்தில் மேன்மையுற்றிருந்த அந்தணரும் சான்றோரும் கடுங்கோவை நாடி வருவாராயினர்.

அந் நாளில் குடநாட்டில் குன்றின் கட்பாலி என்ற ஊர் ஒன்று இருந்தது. இப்போது அது கோழிக் கோட்டுப் பகுதியில் பாலிக்குன்னு என்ற பெயருடன் விளங்குகிறது அவ்வூரில் ஆதனார் என்னும் நல்லிசைச் சான்றோர் வாழ்ந்தார். அவரைக் குன்றின்கட் பாலி ஆதனார் என அக் காலத்தார் வழங்கினர். பிற்காலத்தே குன்றின்கட்