பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244 சேர மன்னர் வரலாறு



என்றொரு சொல்லைத் தன் உண்மையன்பு விளங்க இனிது எடுத்துரைத்தான். வேந்தராயினும் வினைவல் ராயினும் யாவராயினும் சான்றோர் பரவும் சால்புடைய ராயின், அவரைக் கண்டு பாடிப் புகழ்வது, நல்விசை விளைக்கும் சொல்லேருழவர் இயல்பு என்பதை மறந்து சேரமான் கூறியது கபிலர்க்கு வியப்பைத் தந்தது ஆயினும், அதனை அவ்வாறே கூறாமல், இளையனான செல்வக் கடுங்கோவின் செம்மலுள்ளம் மகிழ்வும், தமது கருத்து விளங்கவும் உரைக்கத் தொடங்கி, முகத்திற் புன்னகை தவழ, “வேந்தே, எங்கள் தலைவனான வேள்பாரி விண்ணுலகம் அடைந்தான்; என்னைக் காத்தளிக்க வேண்டும் என யான் குறையிரந்து வந்தே னில்லை. ‘ஈத்தற்கு இரங்கான், ஈயுந்தோறும் இன்பமே கொள்வன்; அவ்வகையிலும் பெருவள்ளன்மையே உடையன் எனச் சான்றோர் நின்னைப் பற்றிக் கூறினர்; அந்த நல்லிசையே, என்னை ஈர்த்துக் கொணர்ந்து, நின்னால் கொன்று குவிக்கப்பட்ட களிறுகளின் புலால் நாறும் இப் பாசறைத் திருவோலக்கத்திற் சேர்த்துளது; அதனால்தான் யான் வந்துளேன்[1] என்ற கருத்தமைந்த விடையொன்றைப் பாட்டுருவில் கூறினர். அதன் சொன்னலமும் பொருணலமும் செல்வக் கடுங்கோவின் உள்ளத்தைக் கபிலர்பால் பிணிந்து விட்டன; தன்னோடே இருக்குமாறு வேண்டி அவரைத் தன் வஞ்சி நகர்க்கு அழைத்துச் சென்றான்.


  1. பதிற். 61.