பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக்கடுங்கோ வாழியாதன் 245



வஞ்சிமா நகர்க்கண் இருந்து வருங்கால், செல்வக் கடுங்கோ , வடவேந்தர் இருவரை ஒரு முற்றுகையில் தமிழ்ப்படை செறித்து வென்றதும், அவர்களாற் கைவிடப்பட்ட தானை மறவரை ஆட்கொண்டதும் சான்றோர் சொல்லக் கபிலர் கேட்டுக் கடுங்கோவின் பெருந்தன்மையைப் பாராட்டி, “வேந்தே, நீ கண்டனையேம் என்று புகலடந்த மறவரை உங்கள் சேரர் குடிக்குரிய முறைமையுடன் ஆண்டாய்; அதனால், உலகத்துச் சான்றோர் செய்த நல்லறம் நிலைபெறும் என்பது மெய்யானால், நீ வெள்ளம் என்னும் எண் பலவாகிய ஊழிகள் வாழ்வாயாக[1]” என வாழ்த்தினார்.

ஒரு நாள், செல்வக்கடுங்கோ, கபிலரோடு சொல்லாடி யிருக்கையில் அவருடைய கையை அன்போடு பற்றினான். அது பூப்போல் மென்மையாக இருந்தது. அவனுக்கு அது புதுமையாக இருக்கவே, அவன் கபிலரை நோக்கி, ‘நும்முடைய கை மென்மையாக இருக்கிறதே, என் கை அவ்வாறு இல்லையே!” என்று வியந்தான். அவன் “நின்னுடைய” என்னாமல் “நும்முடைய கை” எனப் பன்மையிற் கூறியதனால், அது தன்னையும் தன்னையொத்த பிற புலவரையும் குறித்ததாகக் கொண்டு, “வேந்தே, நின்னைப் பாடுவோர் கைகள் நாடோறும் ஊன்துவையும் கறிசோறும் உண்டு வருந்துதல் அல்லது பிறிது தொழில் அறியா; ஆதலால் ‘நன்றும் மெல்லிய பெரும்’ என்றும், களிறுகளைச்


  1. பதிற். 63.