பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக்கடுங்கோ வாழியாதன் 249



என்று பாடிப் பாராட்டினர். அப் பாட்டைக் கேட்ட வேந்தரும் சான்றோரும் பிறரும் அவர் கூறியதை உடன்பட்டு உவகையுற்றனர்.

கபிலர் வாழ்ந்த காலத்தில், சோழ பாண்டிய நாடுகளில் சிற்றரசர்களும் குறுநிலத் தலைவர்களும் சிறந்திருந்தனரே யன்றி, முடிவேந்தர் எவரும் புலவர் பாடும் புகழ் கொண்டு விளங்கவில்லை. இந் நிலையைக் கபிலர் பாடிய பாட்டுகளைக் காண்போர் நன்கு காணலாம். இந் நிலையால் நாட்டில் வாழ்ந்த பாணர், கூத்தர், பொருநர், புலவர் முதலிய பலரும் செல்வக் கடுங்கோவின் திருவோலக்கம் நோக்கி வருவாராயினர். அவர்கட்கு ஏற்ற வரிசையறிந்து வரையா வள்ளன்மை செய்த கடுங்கோவின் புகழ்க்கு எதிரே அச் சோழ பாண்டியர் பெயரும் பிற செல்வர் சிறப்பும் விளங்கித் தோன்றவில்லை. இதனைப் புலமைக் கண்கொண்டு நோக்கிய கபிலர், வேந்தனை நோக்கி, “சேரலர் பெரும் , விசும்பின்கண் ஞாயிறு தோன்றி ஒளிருங்கால், அங்குள்ள விண்மீன்கள் ஒளியிழந்து அஞ் ஞாயிற்றின் ஒளியில் ஒடுங்கிவிடுகின்றன; அதுபோலவே, நின்புகழ் ஒளியில் ஏனைவேந்தர் அனைவரும் ஒளியிழந்து ஒடுங்கிவிட்டனர்; பரிசிலர் கூட்டம் நின்னை நோக்கி வந்த வண்ணம் இருக்கிறது; அதே நிலையில் அக் கூட்டத்திடையே நின்பால் வந்தபின் பசியும் இல்லை; பசியுடையோரைக் காண்பதும் அரிது; அம் மகிழ்ச்சி யாலன்றோ நின்னை இப் பாசறை இடத்தே காண வந்தேன்[1]” என்று பாடி அவனை மகிழ்வித்தார்.


  1. பதிற். 64.