பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252 சேர மன்னர் வரலாறு



வாழ்வில் இனிது இருக்கற்பாலர். நின் பிரிவை ஆற்றாமல் வருந்தி, வினைமுற்றி மீண்டு நீ வந்து கூடும் நாளைச் சுவரில் எழுதி விரல் சிவந்து வழிமேல் விழி வைத்திருக்கும் அணங்கெழில் அரிவையர் மனத்தைப் பிணிப்பது நின் மார்பே. நின் தாணிழலில் வாழும் வீரர் மார்பும் அப் பெற்றியது தானே” என்று கருத்து அமையக் கூறினர்[1]. அவர் கருத்தை அறிந்த வேந்தன் தன் நகர்க்குத் திரும்பினான். வாகை சூடிச் சிறக்கும் அவன் தானையும் மகிழ்ச்சியுடன் மீண்டது.

செல்வக் கடுங்கோ வஞ்சிநகர்க்கண் இருக்கையில் வேனிற் காலம் வந்தது. சேரவேந்தர்க்குரிய முறைப்படி, வேந்தன் மலைவளம் விரும்பிப் பேரியாற்றங் கரையில் நிற்கும் நேரி மலைக்கு அரசியற் சுற்றம் சூழ்வரச் சென்றான். சேர வேந்தர் தங்கிய அவ்விடம் இப்போது நேரிமங்கலம் என்ற பெயருடன் இருக்கிறதென்பது நினைவுகூரத் தக்கது. மலைவாணர், இனியவும் அரியவு மாகிய பொருள்களைக் கொணர்ந்து தந்து சேரவரசனை மகிழ்வித்தனர் அங்கே அவனது திருவோலக்கத்துக்குக் கபிலரும் வந்து சேர்ந்தார்.

கடுங்கோவின் திருவோலக்கத்தில் ஒருபால் அரசியற் சுற்றத்தார் இருந்தனர்; ஒருபால், தானைத் தலைவர், ‘எந்தக் கணத்திலும் மக்கள் இறப்பது உண்மை; அதனால், புகழ் நிற்கப் பொருது இறப்பதே வாழ்க்கையின் பயன்’ என எண்ணும் காஞ்சியுணர்வு பெற்றுக் காட்சி நல்கினர். ஒருசார் விற்படைத் தலைவர்,


  1. பதிற். 68.