பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக்கடுங்கோ வாழியாதன் 255



ஒழுக்கத்தைப் பண்டையோர் தமிழ் என்றே குறிப்பதுண்டு. “தள்ளாப் பொருள் இயல்பின் தண்மிழ்[1]” என்று பரிபாடல் குறிப்பது காண்க. அவன் பொருட்டுக் குறிஞ்சிப் பாட்டு எனப்படும் அழகிய பாட்டைப் பாடி அதன் வாயிலாகக் கபிலர் தமிழரது தமிழ் ஒழுக்கத்தின் தனி மாண்பை அவனுக்கு அறிவுறுத்தினார்.

ஒருகால், கடுங்கோ வாழியாதன் நேரிமலைக்கு வட கிழக்கில், பேரி யாற்றுக்கும் அயிரை யாற்றுக்கும் இடையில் வானளாவ உயர்ந்த கோடுகளும் மிகப் பல அருவிகளும் கொண்டு நிற்கும் அயிரை மலைக்குத் தன் சுற்றம் சூழச் சென்றான். அங்கே அவன் தங்கிய இடம் இப்போது தேவிகுளம் எனப்படுகிறது. அங்கே கொற்ற வைக்குக் கோயில் உண்டு. அதனைச் சேர வேந்தர் வழிபடுவது மரபு, அங்கே தங்கி இருக்கையில் கபிலர், வாழியாதனுடைய தானைச் சிறப்பும், அவனது தலைமைப் பண்பும் அரசமாதேவியின் நன்மாண்பும், பிறவும் முறைப்படத் தொகுத்தோதி, வானுலகம் கேட்குமாறு முழங்கும் அருவிகள் உச்சியினின்றும் இழியும் இந்த அயிரைமலை போல, “தொலையாதாக நீ வாழும் நாளே[2] என்று வாழ்த்தினார். அவ் வாழ்த்தின் கண், கடவுளர் கடன், உயர் நிலையுலகத்து ஐயர் கடன், முதியர் கடன் ஆகிய கடன் பலவும் இறுத்தது போல, எனக்குப் பரிசில் தந்து புரவக்கடன் ஆற்றுக என்ற குறிப்பையும் உள்ஸ்ரீத்திப் பாடினார்.


  1. பரி. 9:25.
  2. பதிற். 70.