பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 261



சேரமான் பெருஞ் சேரலிரும் பொறை காலத்தில் அதியமான் எழினியென்பான் தகடூரிலிருந்து தகடூர் நாட்டை ஆண்டு வந்தான்.

சேர நாட்டரசு தனது தகடூர் நாடு வரையில் பரந்திருந்தது , அதியமான் எழினிக்கு மன அமைதியைத் தரவில்லை. அதனால், சோழ பாண்டிய முடிவேந்தர் சிறந்த நிலையில் இல்லாதிருந்தமையால், சேர மன்னர் கொங்குநாடு முழுதும் கொண்டு தமிழகம் எங்கும் சேர வரசினையே நிலைபெறச் செய்ய முயல்கின்றனர் என்று எழினி எண்ணினான். ஆங்காங்குத் தனக்குக் கீழ் தன் ஆணைவழி அரசு புரிந்த வேளிர் தலைவரையும் பிற ஆயர் தலைவரையும் ஒருங்கே கூட்டிச் சேரரைக் கொங்கு நாட்டினின்றும் போக்கிவிட வேண்டும் என அவர்களோடு ஆராய்ச்சி செய்தான். எழினி செய்த சூழ்ச்சிக்குத் துணையாய் வந்த தலைவர்களுள் கழுவுள் என்னும் ஆயர் தலைவனும் ஒருவனாவான்.

முன்பு ஒருகால், அக் கழுவுள், காமூர் என்னும் ஊரிடத்தே இருந்து கொண்டு, தென் கொங்கு நாட்டில் வாழ்ந்த குறுநில தலைவர்களான வேளிர்களின் நாட்டில் புகுந்து குறும்பு செய்தான். முசிறிப் பகுதியில் லிருக்கும் திருக்காம்பூர் அந் நாளில் காமூர் என வழங்கிற்று. அவனது குறும்பு கண்டு சினந்த வேளிர்கள் பதினால்வர் ஒருங்குகூடி அவனது காரை முற்றி நின்று கடும்போர் புரிந்தனர். கழுவுள் அவர் முன் நிற்கலாற்றாது ஓடி விட்டான். அவனது காமூரும் தீக்கிரையாயிற்று[1].


  1. அகம். 135.