பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262 சேர மன்னர் வரலாறு



தோற்றோடிய கழுவுன் கொல்லிக் கூற்றத்துக்கு வடக்கில் தகடூர் நாட்டை அடுத்துள்ள நாட்டில் தங்கித் தன் கீழ் வாழ்ந்த ஆயர்கட்குக் காவல் புரிந்து வந்தான்.

அப்போது, தனக்கு அணிமையிலுள்ள அதிய மான்கள் சொல்லுமாறு, சேரர் வருகையைத் தடுக்காவிடின், அவரது பகைமை தோன்றித் தனக்கும் தன் கீழ் வாழ்வார்கக்கும் கேடு செய்யுமென எண்ணிக் கொல்லிக் கூற்றத்துத் தென் பகுதியிலும் காவிரியின் மேலைக் கரையிலுள்ள குறும்பு நாட்டிலும் புகுந்து குறும்பு செய்தான். அதியமான்களின் ஆதரவில் வாழ்ந்த வேளிர் சிலர் கழுவுளுக்குத் துணை புரிந்தனர்.

இந் நிலையில், செல்வக்கடுங்கோ வாழியாதன் பாண்டி நாட்டில் போர் புரிந்து சிக்கற்பள்ளியில் இறந்த செய்தி நாட்டிற் பரவிற்று. அற்றம் நோக்கியிருந்த கழுவுள் அச் சமயத்தை நெகிழவிடாமல் வேளிர் சிலர் துணை செய்யக் கொல்லிக்கூற்றம் முற்றும் தனதாக்கிக் கொண்டு காவிரியின் வடகரைப் பகுதியில் தனக்கு ஓர் இருக்கை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வரலானான்.

ஆயர் தலைவனான கழுவுள், கொல்லிக் கூற்றத்தைக் கைப்பற்றிக் கொண்ட செய்தி, கொங்கு வஞ்சியாகிய நகர்க்கண் இருந்த சேரர் தலைவன் அறிந்து, செல்வக் கடுங்கோவுக்குப்பின் சேரமானாய் அரசு கட்டில் ஏறிய பெருஞ்சோல் இரும்பொறைக்குத் தெரிவித்தான். உடனே, இரும்பொறை, பெரும்படை யொன்றைத் திரட்டிக் கொண்டு கொங்கு நாட்டுக் கொல்லிக் கூற்றத்துட் புகுந்தான். பெரும்படை போந்து தங்கியிருப்பதை உணராது கழுவுள் தன் அரணிடத்தே