பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர நாடு 25



எல்லையாகக் கூறும் கூற்றிரண்டும் பிற்காலத்தன என்பது தானே விளங்கும். மலையாளம் மாவட்டத்தில் குறும்பர் நாடு தாலூகாவைச் சேர்ந்த ஒரு பகுதிக்குப் பழநாடு என்று பெயர் உண்டு. அதன் வடவெல்லை வடகரை யென்றும் அதனருகே வந்து கடலில் கலக்கும் ஆறு சேரவாறு என்றும் பெயர் பெறும். வடகரை யென்னும் ஊர் படகரா (Badakara) என்றும், அந்த ஆறு தோன்றும் இடத்தருளேயுள்ள ஊர் சேரபுரம் என்றும் இப்போது வழங்குகின்றன. இதனால் ஒரு காலத்திற் சேர நாடு வடக்கிற் பழநாட்டோடு நின்றமை தெரிகிறது. இதற்கு வடக்கில் கோகர்ணத்தையும் பின்பு ஹோன வாற்றையும் எல்லையாகக் கொண்டு கொண்கான நாடு விளங்கிற்று.

இங்கே கண்ட பழநாடு பிற்காலத்தே ஓர் அரச குடும்பத்தினர் ஆட்சியிலிருந்தது; அவர்கள் பின்னர்க் கிழக்கில் மைசூர் நாட்டையடைந்து, அங்கே அஸ்ஸன் மாவட்டத்தில் மஞ்சரபாது தாலூகாவைச் சேர்ந்த அயிகூர் என்னுமிடத்தேயிருந்து இறுதியில் மைசூர் வேந்தர்க்கு அடங்கி யொடுங்கினர்[1]. இந்தப் பழநாட்டு வேந்தர் தம்மை நாயக்க மன்னர் என்பதனால் அவரது தோற்றவொடுக்கங்கள் பண்டை நாளைச் சேர நாட்டைக் காண்டற்குத் துணையாகாமையால் அதனை இம்மட்டில் நிறுத்தி மேலே செல்வாம்.

இனி, “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்[2]” என வரும் தொல்காப்பிய நூற்பாவொன்றுக்கு உரை கண்ட


  1. L. Rice: Mysore Vol. ii p361 and Vol i p 419
  2. தொல். சொல். தெய்வச் . 295