பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270 சேர மன்னர் வரலாறு



தீப்போல இத் தீயழல் வெறுப்புவதும் காண ஒருபால் வியப்பும் அரிசில்கிழார் உள்ளத்தில் உண்டாயின. சேரமானை நோக்கி, “இகல்பெருமையின் படைகோள் அஞ்சார் சூழாது துணிதல் அல்லது வறிதுடன் நாடு காவல் எதிரார் கறுத்தோர்[1]” என்று பாடினர். சிறிது போதில் தானைத்தலைவர் சிலர் கைப்பற்றப்பட்டுச் சேரமான்முன் நிறுத்தப்பட்டனர். அவர்கள் சேரமானுடைய படைப் பெருமையை அறிந்து, “ஆ, இதனை அறியாமலன்றோ கெட்டோம்” என எண்ணும் குறிப்பு அவர் முகத்தில் நிலவிற்று. அதனை நோக்காது சேரமான் சினம் மிகுவது கண்டார் அரிசில்கிழார். அவர், “வேந்தே, உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி அறிந்தனை அருளாயாயின், யார் இவண், நெடுந்தகை, வாழுமோரே[2]” என்று பாடி அவருட் சிலரை உய்வித்தார்.

பின்னர், ஒருநாள் தகடூர் வேந்தனான எழினியும் வேளிர் சிலரும் தம்மிற் கூடிப் பொருவது சூழ்கின்றனர் எனச் சேரமானுடைய ஒற்றர் போந்து உரைத்தனர். சேரர் படை செய்யும் போர் வினையால் நீர்வளமும் நிலவளமும் பொருந்திய பகுதிகள் அழிவுற்றுப் புன்செய்க் கரம்பையாய்ப் பாழ்படுவதும், மக்கள் செந்நெல் பெறாது வறுமையுற்று வாடி வருந்துவதும் கண்டிருந்தமையால், தாமாகிலும் அதியமான்பால் தூது சென்று போரைக் கைவிடுவித்துச் சேரமானோடு அவனை நண்பனாக்க முயறல் வேண்டும் என


  1. பதிற். 72.
  2. பதிற். 71.