பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 271


நினைத்தார். இதனை வெளிப்படக் கூறலாகாமை கண்டு, “வேந்தே, நீயோ இரும்புலியைக் கொன்று பெருங்களிற்றைத் தாக்கி அழிக்கும் அரிமாவை ஒப்பாய்; நின்னோடு பகைத்துப் போர் செய்யக் கருதும் தகடூர் நாட்டு வேந்தரும் வேளிரும் பிறரும் வந்து அடிபணிந்து நின் ஆணைவழி நிற்கும் முடிவு கொள்ளாராயின், ‘தத்தம் பாடல் சான்ற வைப்பின் நாடுடன் ஆனாதல் யாவணது?[1]” என்றார்.

அவரது குறிப்பறிந்த சேரமான் இரும்பொறை அவரை நோக்கி, “சான்றீர், தகடூர் வேந்தனான எழினியும் அவன் துணை வரும் தம்மையும் தங்கள் தலைமை யையுமே நோக்கிச் செருக்கால் அறிவு மழுங்கி இருக்கின்றனர், அவரைத் தெருட்ட வல்லவர் யாவர்? ஒருவரும் இலர்” என்றான், அவன் கூறியது உண்மையே எனத் தேர்ந்தாராயினும், தாம் ஒருமுறை முயல்வது நன்று என்று அரிசில்கிழார் நினைத்து அவன்பால் விடை பெற்றுச் சென்றார். அதியமான் எழினியின் குடிச்சிறப்பும், நெடுமான் அஞ்சி போல் அவன் நல்லறிவும் சான்றோர் புகழும் சான்றாண்மையும் உடையனாதலும், அவரை சூழ்ந்திருக்கும் தீநெறித் துணைவர்களால் அவன் சேரனது படைப் பெருமை நோக்காது தன்னை வியந்து தருக்கியிருப்பதும் அவர் நெஞ்சை அலைத்தன.

அரிசில்கிழார் தகடூர்க்குச் சென்று கொண்டிருக் கையில் வழியில், தலைவர் சிலர் அவரைக் கண்டனர்.


  1. பதிற். 72.