பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272 சேர மன்னர் வரலாறு



அவர்கள் கொல்லிக் கூற்றத்தைக் கடந்து சேரர்படை நிலையைக் கண்டு வருவது அறிந்து அவர் வாயிலாகச் சேரர் படையின் பெருமையை அறிய விரும்பினர். அவர்களுடைய ஒற்றர்களை வழிப்போக்கர் உருவில் அவரெதிரே விடுத்தனர். அவர்கட்கு விடை கூறுவாராய், அரசில்கிழார், “வழிப்போக்கர்களே , சேரமானுடைய படையின் தொகை யாது என்று கேட்கின்றீர்கள். பகையரசர்களைக் களத்தே கொன்று அவர் படைகளை வீற்றுவீற்றோடத் துரத்தி, இறந்து வீழ்ந்த பிணத்தின் மேல் தேராழி உருண்டு ஓடப் பொரும் சேரமானுடைய தேர்களையும் குதிரைகளையும் மற்றவர்களையும் எண்ணுதல் முடியாது; ஆதலால், நான் அவற்றை எண்ணவில்லை; ஆனால், ஒன்று கொங்கருக்கு உரியனவாய் நாற்றிசையும் பரந்து மேயும் ஆனிரைகள் போல யானை நிரைகளை அவன் தானையின்கட் காண்கின்றேன்[1]” என்று இசைத்தார்.

பின்பு அவர் தகடூரை அடைந்து அதியமான் எழினியைக் கண்டு, அவர்களுடைய படைவலியையும் சேரனுடைய வலியையும் எடுத்துக்காட்டி இரண் டினையும் சீர்த்தூக்கித் தக்கது செய்யுமாறு தெரிவித்தார். உடனிருந்த தலைவர்களும் பிறரும் எழினியின் உள்ளத்தை மாற்றிப் போர் செய்தற்கே அவனைத் தூண்டினர். எழினியின் உள்ளமும் அவர் வழியே நின்றது. அது காணவே அரிசில் கிழார்க்கு மனச் சோர்வு பிறந்தது. தகடூரை விட்டுச் சேரமான் பாசறை


  1. பதிற். 77.