பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274 சேர மன்னர் வரலாறு



இவற்றைக் கேட்டதும் பெருஞ்சொல் இரும் பொறையின் மனத்தில் சினத்தே கிளர்த்தெழுந்தது; இன்றிருந்து நாளை மறையும் வேந்தரினும், என்றும் பொன்றாது புகழுடம்பு பெற்று உலகம் உள்ளளவும் நின்று நிலவும் சான்றோரைத் தெளியாத வேந்தர் நிலத்திற்கே பொறை எனக் கருதினான்; தன் தானைத் தலைவரை நோக்கி, உடனே தகடூரை முற்றி உழிஞைப் போர் உடற்றுமாறு பணித்தான். கடல் கிளர்ந்தது போல அவனது பெரும் படை கிளர்ந்து சென்று தகடூரைச் சூழ்ந்து கொண்டது. அதியமான் எழினியும் அவற்குத் துணை நின்ற தலைவர்களும் போரெதிர்த்தனர். அப் போரில் மிகப் பல படைமறவர் மாண்டனர், களிறுகள் வீழ்ந்தன; குதிரைகள் இறந்தன; வேளிரும். வேந்தரும் பிறரும் வெந்திட்டு வெருண்டோடினர்; தகடூர் படை கண்டு பொடியாயிற்று. அதியமான் தன் தனியாண்மை விளங்க நின்று அருஞ்சமம் புரிந்தான். அறிஞர் அறிவு கொல்வார்க்கு அரண் ஏது? சேரமான் செலுத்திய படைக்கு ஆற்றாது முடிவில் எழினி தன் அகன்ற மார்பை வீரமகட்கு நலகி மறவர் புகும் வானுலகை அடைந்தான். அவனது தகடூரும் தீக்கிரை யாயிற்று. உய்ந்த வீரர் சிலர் சேரமான் அருள் நாடிப் புகலடைந்தனர். வெற்றிமிகு விளங்கிய பெருஞ்சேரல் இரும்பொறை, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை எனச் சான்றோர் பரவும் சால்பு எய்தினான்.

எழினியின் வீழ்ச்சி கேட்ட வேளிர் சிலர், சிதறியோடிய மறவரை ஒருங்கு திரட்டி வந்து போரெதிர்த்தனர். ஒருபால் முரசு முழங்க ஒருபால்