பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290 சேர மன்னர் வரலாறு



பழையன் மாறன் என்பான் குறுநிலத் தலைவனாய் விளங்கினான். விச்சிக்கோவுடன் கூடிக் கொங்குநாட்டில் இரும்பொறையோடு போர் தொடுத்துத் தோற்று ஓடியவர்கள், இளஞ்சேட் சென்னியும் அறிவுடை நம்பியும் தூண்டி விடுத்த அரசிளஞ் செல்வராவர்; அப்போர் நிகழ்ந்த சின்னாட்கெல்லாம் இளஞ்சேட்சென்னி இறந்தானாக, பாண்டி நாட்டில் அறிவுடைநம்பி மாத்திரம் மதுரையில் இருந்து வந்தான்.

அறிவுடை நம்பி தன் பெயருக்கேற்ப நல்ல அறிவுடையனே; ஆயினும், குடிகளிடம் வரி வாங்குவதில் அவன் தன் அரசியற் சுற்றத்துக்கே முழுவுரிமை வைத்தான். அதனால், நாடு யானை புக்க புலம் போலப் பெருங்கேட்டுக்கு உள்ளாயிற்று. அவன் சுற்றத்தாரோ புலவர் பாலும் பிறர்பாலும் பொழுது நோக்குச் செலுத்தி, வரிசையறிந்து ஆற்றும் செயல் திறம் இல்லாதவர்[1]. அதனால் பிசிராந்தையார் முதலிய சான்றோர் தக்காங்கு வேண்டும் அரசியல் நெறிகளை அவனுக்கு அறிவுறுத்தினர். ஆயினும், அச் சான்றோர் உள்ளத்தைப் பிணிக்கும் செங்கோன்மை இல்லை யாயிற்று. அவர் தமது அன்பெல்லாம் உறையூர்ச் சோழனான கோப்பெருஞ் சோழன்பாலே செலுத்தி வாழ்ந்தார்.

பாண்டியனுடைய “வரிசை யறியாக் கல்லென்” சுற்றத்தாருள் இளம்பழையன் மாறனும் ஒருவன். அவன் பழையன் கோட்டையிலிருந்து தான் வேட்டபடி நாட்டை ஆட்சி செய்து வந்தான். அவனுக்குக் கொங்கு


  1. புறம். 84.