பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294 சேர மன்னர் வரலாறு



போர் நிகழாமையால் நின் படை முழுதும் போர் வெறி மிகுந்து மைந்துற்றிருக்கிறது; பகைவர் தாமும் போர் எதிர்கின்றிலர்; நாள்கள் பல கழிகின்றன; ஆதலாற்றான், யான் நின்னைக் காணப் பாடி வந்தேன்[1]” என்றார். வேந்தன் தன் மகிழ்ச்சியைத் தன் இனிய முறுவலாற் புலப்படுத்தினான். சான்றோர் அவனோடே தங்கினர்.

புலமைமிக்க சான்றோர் உடனிருப்பது சூழ்ச்சித் துணையாதலை நன்கு அறிந்தவன் சேரமான்; அதனால் அவன் அவரைத் தன்னோடே இருத்திக் கொண்டான். இரண்டொரு நாட்குப்பின் ஒருபால் போர் தொடங்கிற்று. சேரன் படைமிக்க பெருமிதத்துடன் சென்றது. அவனே அதனை முன்னின்று நடத்தினான். அவனுடைய போருடையும் பெருமித நடையும் பெருங்குன்றூர் கிழார்க்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தன. பாசறை யிடத்திருந்த பார்வல் இருக்கைக்கண் இருந்து அவர் போர்வினையைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், வேந்தன் வெற்றி விளங்கத் திரும்பி வந்தான். கண்ட புலவர் பெருந்தகை , “யானைத் தொகுதியும் கொடி அசையச் செல்லும் தேர்நிரையும், குதிரைப் பத்தியும் ஏனை மறவர் திரளும் ஆகிய நின் தானை அணிகொண்டு செல்லும் செலவு காண்போர்க்கு மிக்க இன்பத்தையே தருகிறது. ஆனால், ஒன்று, இனிது சென்று நன்கு போர் உடற்றியவழி மிக்க அருங்கலங்களை நல்குவது போர்வினை; ஆயினும், நின்னை நேர்பட்டுப் பொருது வீழ்கின்ற பகைவர் கண்கட்கு அச்சத்தையும்

  1. பதிற். 82.