பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை 295



அவலத்தையும் அன்றோ அது தருகிறது [1]” என்று இனிய இசையோடு பாடினார். “போர்ச் செலவுக்கு அவ்வியல்பு இல்லையாயின், அது நன்மையும் தீமையுமாகிய பயன்களை விளைக்காதன்றோ?” என வேந்தன் கூறினன். சான்றோரும் “ஆமாம்” எனத் தலையசைத் தனர். “இதுபற்றியே. அறிவுடையோர் போர்வினையைத் தவிர்த்தற்கு எப்போதும் முயன்று கொண்டிருக்கின்றனர்” எனச் சேரமான் கூறி முடித்தான்.

மறுபடியும், ஒருபால் போர் தொடங்கிற்று; சேரமான் படை மறவர்களுள், பூழியர் யானைகளைத் தொழில் பயிற்றுவதில் கை தேர்ந்தவர், அவர்களுடைய யானைகள் மழைமுகிலின் முழக்கங் கேட்டாலுமே அதனைப் போர் முரசின் வெம் முழக்கம் எனக் கருதி வெனில் கட்டை அறுத்துக் கொண்டு வெளிவரும் வீறுடையவை. அவைகள் ஒருபால் அணி வகுத்துச் சென்றன. குதிரைப்படை, கடலலை போல் வரிசை வரிசையாய் வந்தன. வேல் வாள் வில் முதலிய படை ஏந்தும் மறவர் போர் தொடங்கினர். சிறிது போதிற் கெல்லாம் பகைவர் படை உடைந்து ஓடலுற்றது.

கோப்பெருஞ்சோழன் மக்களும் பழையன் மாறனும் அந் நிலையிலேயே அடிபணிந்து சேரமானது அருளும் நட்பும் பெற்றிருக்கலாம். அது செய்யாது, செருக்கொன்றே சீர்த்த துணையாகப் பற்றிக் கொண்டு கடும்போர் உடற்றினர். மண்டிச் சென்று பொருதற்குரிய தண்ணுமை முழக்கம் கேட்டதுமே, சேரர் படை மறவர்


  1. பதிற். 83.