பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302 சேர மன்னர் வரலாறு



போர் நடப்பதைப் பெருங்குன்றூர் கிழார் ஒருபால் இருந்து நோக்கினார். இரும்பொறையின் பெரும்படை மறவர் கடுஞ்சமர் புரிவதும், பகைமறவர் பலர் பலராக மடிந்து வீழ்வதும் கண்டார். அவர் நெஞ்சில் குறுநிலத்தவர்பால் இரக்கம் பிறந்தது. வேந்தனைக் கண்டு, “வேந்தே, யான் பகைப் படைத் தலைவரிடம் சென்று நினது படைமாண்பை எடுத்தோதி, அவர்கள் வந்து நின் திருவடியைப் பணிந்து அருள் பெறுமாறு செய்யக் கருதுகின்றேன்” எனச் சொல்லி விடை பெற்றுக் கொண்டு சென்றார். கருதியவாறே, பகை மன்னர் களைக் கண்டு வேண்டுவனவற்றை எடுத்தோதினார். அவர்கள், “இரும்பொறையோ வெப்புடைய ஆண்டகை; பகைவரை அருளின்றிக் கொலை புரிபவன். அவனுடைய போர்க்களம் மறவரது குருதி தோய்ந்து நெடுநாள் காறும் புலால் நாறிக் கொண்டிருக்கும். அவன் அருளின்றிச் செய்தன பல” எனப் பெருங்குன்றூர் கிழாரது மனமும் மருளுமாறு மொழிந்தனர். அவர்கட்கு அவர், ‘தலைவர்களே, போர்க்களம் குருதிப் புலவு நாறப் பகைவரைக் கொன்றழிக்கும் வெந்திறல் தடக்கை வென்வேற் பொறையன் என்று பலரும் கூற, யானும் கேட்டு, அவனை வெப்புடைய ஆடவன் என்றே கருதினேன்; பின்பு, யான் அவனை நேரில் சென்று கண்டேன். தனது நல்லிசை இந் நிலவுலகில் நிலைபெற வேண்டும் என்ற ஆர்வமும், அதற்கேற்ப இல்லார்க்கு வேண்டுவன நல்கி அவரது இன்மைத் துயரைப் போக்குவதிற் பேருக்கமும் உடையனாதலைக் கண்டேன். அவன், தான் செய்யும் செய்வினையின் நலம்