பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304 சேர மன்னர் வரலாறு



கொண்டு நல்லறிவு கொளுத்தித் தன் ஆணைவழி நிற்குமாறு பண்ணினான். அதனால் மரந்தையோர் பொருநன் என்ற சிறப்பை நம் இரும்பொறை பெற்றான்.

தான் சென்ற இடங்களிலெல்லாம் சீரிய வெற்றி பெற்றது குறித்துத் தன் முன்னோரைப் போலவே இரும்பொறையும் அயிரை மலைக்குச் சென்று கொற்றவையைப் பரவினான். குடவரும் குட்டுவரும் பொறையரும் பூழியரும் கொங்கரும் மரத்தையோரும் பிறரும் வந்திருந்தனர். பெருங்குன்றூர் கிழார், விறலி யொருத்தியை நோக்கி, “பொறையன், சந்தனமும் அகிலும் சுமந்து செல்லும் யாற்றில் ஓடும் வேழப் புணையினும் மிக்க அளியன்; அவன்பாற் செல்க; சென்றால் நல்ல அணிகலன்களைப் பெறுவாய்[1]” என்ற ஆற்றுப் படைப் பாட்டைப் பாடி இன்புறுத்தினார்.

சின்னாட்குப்பின், நம் குடக்கோ, அறவேள்வி யொன்று செய்தான். பல நாடுகளிலிருந்தும் சான்றோர் பலர் வந்திருந்தனர். அவ் வேள்வியை அவனுடைய அமைச்சருள் ஒருவனான மையூர் கிழான் என்பான் முன்னின்று நடத்தினான். இந்த மையூர் இப்போது தேவிகுளம் என்று பகுதியில் உளது. இங்கே பழங்காலக் கற்குகைகளும் வேறு சின்னங்களும் உண்டு. வேள்வி ஆசானாகிய புரோகிதன் முறையோடு சடங்குகளைச் செய்து வருகையில் தவறொன்றைச் செய்து விட்டான் மையூர்கிழான் அதனை எடுத்துக் காட்டினான். அது குறித்துச் சொற்போரும் ஆராய்ச்சியும் நடந்தன. மையூர்


  1. பதிற். 87.