பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316 சேர மன்னர் வரலாறு



மகளோடு கூடியுறையும் தலைமகன் கடமை காரணமாகப் பிரியக் கருதுகின்றான்; தன் பிரிவை மெல்லத் தன் காதலிக்கு உணர்த்தலுற்று, “அன்பே, நின்னுடைய மனையகத்தே நின்னைத் தனிப்ப நிறுத்தி யான் பிரிந்திருப்பது என்பது இயலாது; அவ்வாறு ஒன்று இயலுமாயின், அதனால் என் மனைக்கு இரவலர் வாராத நாள்கள் பல உண்டாகுக[1]” என்று இயம்பு கின்றான். பிறிதொருகால் அவன் பிரியவேண்டுவது இன்றியமையாதாகிறது; பிரியக் கருதுகிறான்; பிரிவுக் குறிப்பைத் தோழி அறிகிறாள்; அவள், “தலைவரே, இளமைச் செவ்வியும் காதல் வாழ்வும் ஒருங்கு பெற்றவர்க்கு அவற்றினும் செல்வம் சிறந்ததாகத் தோன்றுமோ?’ செல்வம் இல்லாமையால் ஒருவரது ஆடையை மற்றவர் கூறு செய்து உடுக்கும் அத்துணைக் கொடிய வறுமை உண்டாயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை[2]” என்று சொல்லுகிறாள். மடங்கா உள்ளமுடைய தலைமகன் பிரிவையே நினைவானாயினன். அவனை நோக்கி, “ஐயா, நீவிர் சென்று வருக; சென்றிருக்குங்கால் இங்கிருந்து வருவோரைக் காண்பீர். கண்டால் எம்மைப்பற்றி அவரைக் கேட்கலாகாது” என்றாள். அவன் குறுநகை செய்து, “என்?” என்றான்; “கேட்டால், நீ மேற்கொண்ட வினை தடைப்படும்; எடுத்த வினை முடியாமை கண்டு மக்கள் நின்னை இகழ்வர்; நினது தலைமை அதனால் சிதையும்” என்பது தோன்ற,


  1. குறுந். 137.
  2. கலி. 18.