பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை 327



சேரமானுடைய புகழ்ச் செய்தி குறுங்கோழியூர் கிழாருக்குச் சென்று சேர்ந்தது; அவரைக் கண்ட சான்றோர் “இரும்பொறை ஓம்பிய நாடு புத்தேளிர் வாழும் பொன்னுலகு போல்வது” என்று பாராட்டிக் கூறினர். உளங்கொள்ளலாகாத பேருவகை நிரம்பிய அச் சான்றோர் சேரமான் பாசறையிருக்கும் திருவோலக் கத்துக்கு வந்து சேர்ந்தார். வேந்தன் அவரை அன்புடன் வரவேற்றுச் சிறப்பித்தான். கொல்லி நாட்டு வேந்தர் சூழ வீற்றிருந்த வேந்தனது காட்சி அவர்க்கு மிக்க இன்பம் செய்தது.

“ஒங்கிய நடையும், மணிகிடந்து மாறி மாறி ஒலிக்கும் மருங்கும், உயர்ந்தொளிரும் மருப்பும், செறல் நோக்கும், பிறை நுதலும் கொண்டு, மதம் பொழியும் மலைபோல நின் யானைகள் கந்தணைந்து அசைந்து விளங்குகின்றன. வெண்மதிபோலும் கொற்றக்குடை நீழலில் வாழும் வாள் மறவர் பக்கத்தே நின்று காவல் புரிகின்றனர். ஒருபால் நெல் வயலும், ஒருபால் கரும்பு வயலும் விளைந்து விழாக் களம் போல இனிய காட்சி நல்குகின்றன. நெல் குற்றுவோர் பாடும் வள்ளைப் பாட்டும், பனங்கண்ணி சூடிய மறச் சான்றோர் பாடும் வெறிக்குரவைப் பாட்டும் இசைக்கின்றன. இவ்வகை யால் கடல் போல் முழங்கும் பாசறையில் தங்கிய வேந்தே, நின்னைச் சூழவிருக்கும் வேந்தர் கொல்லி நாட்டுக் கோவேந்தராவர். பகைப்புலத்தில் தாம் வென்று பெற்ற திறைப் பொருளைத் தம்மைச் சேர்ந்தோர்க்கும் அவர் சுற்றத்தார்க்கும் அளித்து உதவும் வண்மையுடையர். அவர்கட்குத் தலைவனாக நீ