பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328 சேர மன்னர் வரலாறு



விளங்குகின்றாய்; யானைக் கண்ணையுடைய சேயே! நின் வரம்பிலாச் செல்வம் பல்லாண்டு வாழ்க. பாடி வந்தோரது நா பிறர்பாற் சென்று பாடாதவாறு நல்கும் வண்மையும் ஆற்றலும் உடைய எம் அரசே, மாந்தரஞ்சேரல் ஓம்பிய நாடு புத்தேளுலகத் தற்று எனச் சான்றோர் சாற்றக் கேட்டு நின்னைக் காண வந்தேன்; வந்த யான் அவர் கூற்று முற்றும் உண்மையாதல் கண்டு உள்ளம் உவகை மிகுகின்றேன். வேற்று நாட்டிடத்தே தங்கியிருக்கும் நின் தானையால் நாடுகாவற்குரிய செயல் வகைகளை மடியாது செய்து எங்கும் சோறுண்டாக வளஞ் செய்கின்றனை, நீ நீடுவாழ்க[1]” என்று பாடி யாவரையும் மகிழ்வித்தனர் பாட்டின் நலங்கண்டு மகிழ்ந்த வேந்தன் அவரைக் குறுங்கோழியூர்க்குக் கிழார் என்று சிறப்பித்தான். சின்னாள்களில் சேரமான் தொண்டிக்குச் சென்றார். சான்றோர் குறுங்கோழியூர் சென்று சேர்ந்தார்.

பின்னர், யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை தொண்டி நகர்க்கண் இருந்து வருகையில், பாண்டி நாட்டில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டி வேந்தனாகும் உரிமை எய்தினான். அவ்வரசு கட்டிலுக்குப் பாண்டியர் குடியிற் பிறந்த வேறு சிலரும் முயற்சி செய்தனர். அவர்கட்குத் துணையாகத் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் என்ற குறுநிலத் தலைவரும், சேரர் குடிச் செல்வரும், சோழர் குடிச் செல்வரும் சேர்ந்து


  1. புறம். 22.