பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை 329



போருடற்றினர். அப் போர் தலையாலங்கானம்[1] என்னு மிடத்தே நடந்தது. அப் போரில் பகைவர் எழுவரையும் வென்று நெடுஞ்செழியன் புகழ் மிகுந்தான். அவன் புகழைக் குடபுலவியனார், இடைக்குன்றூர்க்கிழார் முதலிய பலரும் பாடித் தமிழகமெங்கும் பரப்பினர்.

சேரர் குடித் தலைவனொருவன் பாண்டியனொடு பொருது அழிந்த செய்தியைச் சேரமான் கேள்வி யுற்றான். அத் தோல்வி சேரர்குடிக்கு மாசு தருவது கண்டு யானைக்கண்சேய் நெடுஞ்செழியன் பால் பகைமை கொண்டான். அவனது பகைமை பாண்டியனுக்கும் தெரிந்தது. இருவருடைய படைகளும் ஓரிடத்தே கை கலந்து பொருதன. சேரர் படையினும் பாண்டிப் படை வலியும் தொகையும் மிகுந்திருந்தமையின், சேரர் படை உடைந்தோடலுற்றது. அதனால், பாண்டியர் படை சேரமானை வளைந்து பற்றிக் கொண்டது. நெடுஞ்செழியன் சேரமானைப் பற்றிச் சிறையிட்டான். இச் செய்தி சேர நாட்டுக்குத் தெரிந்தது. அந் நாட்டுச் சான்றோர் எய்திய துன்பத்துக்கு அளவில்லை. சேர நாடு முழுதும் பெருங் கவலைக் கடலுள் ஆழ்ந்தது.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஓரிடத்தே நல்ல அரணமைந்த சிறைக்கூடம் அமைத்து அதன்கண் சேரமானை இருப்பித்தான். அவ்வரண்களைச் சூழ ஆழ்ந்த அகழியொன்று வெட்டி அதன் உண்மை தோன்றாதபடி மேலே மெல்லிய கழிகளைப் பரப்பி மணல் கொண்டு


  1. புறம். 36.