பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை 341



படித்து மகிழ்வது அவனுக்கு வழக்கம். இளங்கீரனார் அவனுக்குத் தாம் பாடிய பாட்டுகளிற் சிலவற்றைப் பாடிக் காட்டினார்.

பொருள் கருதிப் பிரிந்தொழுகும் தலைமகன் நெஞ்சில், அவன் மேற்கொண்டு வினை முடிவில் அவனுடைய காதலியைப் பற்றிய காதல் நினைவுகள் தோன்றி வருத்தும் திறத்தை இரண்டு பாட்டுகளில் வைத்து அழகுறக் கீரனார் பாடியிருந்தார். வினை முடிந்தபின் தலைமகன் தன் மனைக்கு மீண்டு வருகின்றான். அப்போது, தான் திரும்பி வருதலைத் தன் காதலி கேட்பின் எத்துணை மகிழ்ச்சியெய்துவள் என நினைக்கின்றான்; நாடோறும் ஆழி இழைத்தும், குறித்த நாளை விரலிட்டு எண்ணியும், கண்ணீர் நனைப்ப அணைமேல் கிடந்த கன்னத்தை அங்கையில் தாங்கிக் கொண்டு பல்லி சொல்லும் சொல்லைக் கேட்டுத் துயர் மிக்கு உறையும் காதலியின் காட்சி அவன் மனக் கண்ணில் தோன்றி அலைக்கின்றது. பிரிவு நினைந்து பெருந்துயர் உழக்கும் அவளது நிலையைக் கண்டதும், அவனது நெஞ்சு அத் தலைவிபால் சென்று அவள் பின்னே நின்று அவளுடைய முதுகைத் தழுவித் தேற்றுவதாக நினைந்து, ‘இத்துணைப் பெருங்காதற் பணிபுரியும் நெஞ்சே, நீ, அன்று யான் பிரிந்த காலையில் என்னோடு வாராது அவளிடத்தே நின்று இருக்கலாமே; என்னோடு வந்தன்றோ பெருந்துன்பம் உழந்தாய்; இப்போது என் பின்னே வருவதை விட்டு முன்னதாகச் சென்று சேர விரும்பினை; அற்றாயின், செல்க; சென்று சேர்ந்தபின் அங்கே அகல் விளக்கைத்