பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் மாவண்கோ 347


 படிந்திருந்த அவரது ஆடையை நீக்கிப் புத்தாடை தந்து புனைந்து கொள்ளச் செய்தான். இனிய தேறல் வழங்கப் பெற்றது. பின்பு தனக்கெனச் சமைக்கப்பெற்றிருந்த இனிய மான்கறியையும் சோற்றையும் தாமனார்க்கும் அவரோடு வந்த பாணர் முதலியோர்க்கும் நல்கினான்; தன் மார்பில் அணிந்திருந்த மணிமாலையையும் பூத் தொழில் செய்யப்பட்ட மேலாடையையும் தாமனார்க்குத் தந்து இன்புறுத்தினான்.

திருத்தாமனார் அவன் மனைக்கண்ணே சின்னாள் தங்கியிருந்த, அவன், தனக்கும் ஏனைப் பாணர் பொருநர் முதலிய பரிசிலர்க்கும் பெரும் பொருள் நல்கப் பெற்றுக் கொண்டு அவன்பால் விடைபெற்று ஊர் வந்து சேர்ந்தார்.

இச் சேரமான் வஞ்சனுடைய குடிமரபு பற்றியும் அவற்குப்பின் வந்த வேந்தரைப் பற்றியும் வேறு குறிப்பொன்றும் தெரியாமலே அவனது வரலாறு நின்று வற்றுகிறது.


17. சேரமான் மாவண்கோ

மாந்தரஞ்சேரல் இரும்பொறை சேரநாட்டில் இருந்து வருகையில், கடுங்கோக் குடியில் தோன்றிய மாவண்கோ சேரர்க்குரிய கொங்குநாட்டுப் பகுதியை ஆண்டு வந்தான். அக்காலத்தில் சோழ நாட்டில் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆட்சி புரிந்து வந்தது முன்பே கூறப்பட்டது. பாண்டி நாட்டில் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதி அரசு கட்டிலேறி