பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர நாடு 33



தொடர். மேற்கு மலைத்தொடர் என்பது மேனாட்டவர் குறித்த வெஸ்டர்ன் காட்சு (Western Ghats) என்ற பெயரின் மொழிபெயர்ப்பு; வடவர் இதனை சஃயாத்திரி என மொழிபெயர்த்து வழங்குவர்; இதன் பழமையான தமிழ்ப் பெயர் வானமலை என்பது.

தெற்கிற் பொதியின் மலையிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் இம் மலைத் தொடர், பம்பாய் மாகாணத்து தபதி நதிக்கரை வரையில் தொடர்ந்து நிற்கிறது. இதன் நீளம் 1000கல். வட கன்னட மாவட்டத்தில் இரு சிறு பிளவுகளும், இடையில் மலையாள மாவட்டத்தில் ஒரு பெரும் பிளவும், நாகர்கோயிற் பகுதியில் ஒரு சிறு பிளவும் இம் மலைத் தொடரில் உள்ளன. இவற்றுள் மலையாள மாவட்டத் திலுள்ள பிளவுபோல ஏனைய பிளவுகள் இடைக் காலத்தில் மக்கட் போக்கு வரவுக்குப் பெருந்துணை செய்யவில்லை. இப் பெரும் பிளவைப் பாலைக் காட்டுக் கணவாய் என்பது வழக்கம். இப் பிளவின் வடபகுதி வடமலைத் தொடரெனவும், தென்பகுதி தென்மலைத் தொடரெனவும் வழங்கும். இப் பிளவின் இடையகலம் இருபது கல். சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வழியாக மேலைக் கடற்கரைக்குச் செல்லும் இருப்புப் பாதையும் பெருவழியும் (Highway) இப் பிளவினூடே செல்கின்றன. இப் பிளவில் பாரதப் புழை யென்ற பெயர் தாங்கி வரும் ஆறு, பொன்வானி யாற்றோடு கலந்து மேற்கே ஓடி மேலைக் கடலிற் சென்று சேர்கிறது. இப் பிளவின் கீழைவாயிலாகப் பாலைக்காடு நிற்கிறது.