பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352 சேர மன்னர் வரலாறு



சென்னியும், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனும், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியும் ஆட்சி செய்து வந்தனர். “ஒளிறு வேற் கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி”[1] என்றும் “நெடுந்தேர்க் கோதை திருமா வியனகர்க் கருவூர் முன்றுறை[2]” என்றும் சான்றோர் கூறுவதால், குட்டுவன் கோதையது ஆட்சியில் குட்ட நாடு வஞ்சிமா நகரும், அதற்கண்மையிலுள்ள கருவூரும் சிறந்து விளங்கின என்றும் அறிகின்றோம்.

குட்டுவன் கோதை பெருவலி படைத்த முடிவேந்தன். அதனால் அவனுடைய குட்டநாடு பகைவர்க்கு மிக்க அச்சம் பயந்து நின்றது. அக்காலத்தே கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்ற நல்லிசைச் சான்றோர் குட்டுவனை நேரிற் கண்டு பாடியிருக்கின்றார். அப்போது அந்த நாட்டைப்பற்றி ஏனை நாட்டவர் கொண்டிருந்த எண்ணத்தை அவர் நன்கறிந்து தாம் பாடிய பாட்டில் குறித்துள்ளார். ஏனை நாட்டவர் குட்டுவன் கோதையைப் புலியெனவும், அவனது நாட்டைப் புலி கிடந்து உறங்கும் புலம் எனவும் கருதி, புலி துஞ்சம் புலத்திற்குள் செல்ல அஞ்சும் ஆட்டிடையன் போல அவ்வேந்தர்கள் அஞ்சினர் எனவும்[3] குமரனாரது குறிப்புக் கூறுகிறது.

அந்நாளில் குடநாடும் சேர நாடாகவே இருந்தது. கேரள நாடாகவோ கன்னட நாடாகவோ மாறிவிடவில்லை. குடநாட்டில் பிட்டங்கொற்றன் என்றொரு குறுநிலத் தலைவன் ஆட்சிசெய்து வந்தான். அவனது


  1. அகம். 263.
  2. அகம். 93
  3. புறம். 54.