பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354 சேர மன்னர் வரலாறு


கொண்டிருக்கும். பக்கங்களில் உள்ள புனங்களில் காந்தள் முளைத்துக் கைபோல் பூத்து மலைப்புறத்தை அழகு செய்யும். அங்குள்ள பெருங்காடுகளில் வாழும் காட்டுப் பன்றிகள் காந்தட் புனத்தைத் தம் கொம்பால் உழுது காந்தளின் கிழங்கைத் தோண்டி உண்ணும். அதனால் அங்கே வாழும் குறவர் நிலத்தை உழுவது கிடையாது. பன்றி உழுத புழுதியின் செவ்விநோக்கி அவர்கள் தினையை விதைத்துவிடுவர். அது நன்கு வளர்ந்து உரிய காலத்தில் மிக்க தினையை விளைத்து நல்கும். பொங்கற் புது நாளன்று, அவர்கள் புதிது விளைந்த தினையரிசி கொண்டு, மரையா (காட்டுப்பசு) விடத்துக் கறந்த பாலை உலையிற் பெய்து அடுப்பிலேற்றிச் சந்தனக் கட்டைகளை விறகாக எரித்துச் சமைத்த சோற்றைக் கூதாளிமரத்தின் கால் நிறுத்தி மலை மல்லிகைக் கொடி படரவிட்டு இருக்கும் மனைமுற்றிலில் விருந்தினரை இருத்தி, அகன்ற வாழையிலையை விரித்து அதன்மேற் படைத்து உண்பித்துத் தாமும் உண்பர்[1]’ இதனை இப்போது அந் நாட்டவர் புத்தரி (புத்தரிசி ; பொங்கற் புதுச்சோறு என்று வழங்குகின்றனர்[2]. தினை விளையும் பருவம்[3] ஏனற் பருவம் என்றே வழங்குகிறது.

இத்தகைய வளவிய நாட்டில் இருந்து காவல் புரிந்த குறுநிலத் தலைவனான பிட்டங்கொற்றன், தான் பிறந்த குடிக்கு முதல்வனாவன். அந்நாட்டவர் தங்கள் குடியில் முதல்வனாக உள்ளவனைப் பிட்டன் என்பது


  1. புறம். 168.
  2. Imp. Gazett. Mys & Coorg. p. 300.
  3. Malabar. Series. Wyanad. p. 62.