பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் குட்டுவன்கோதை 355



வழக்கம். இன்றும் வயனாட்டுக் குறிச்சியாளர் பால் இம் முறைமை இருந்துவருகிறது.

இப் பிட்டங்கொற்றனுடைய மலை குதிரையெனப்படுவதால், ஏனைக் குதிரையாகிய விலங்குகளினின்றும் வேறுபடுத்தற் பொருட்டுச் சான்றோர் குதிரை மலையை “ஊராக் குதிரை” என்று கூறுவர். ஏனைக் குதிரைகளை மக்கள் ஊர்ந்து செல்வர்; இக் குதிரை அன்ன தன்று. அது பற்றியே அம் மலை ஊராக் குதிரை எனப்படுகிறது; வேந்தனும் “ஊராக் குதிரைக் கிழவன்” எனப்படுகின்றான்.

இம்மலை நாட்டில் வாழும் மறவர் பலரும் கூரிய அம்பும் சீரிய வில்லும் உடையவர். சேர நாட்டவர்க்குப் பொதுவாக விற்படை உரியதென்றாலும் இக்குடநாட்டவர்க்கு அது சிறப்புடைய கருவியாகும். இக்காலத்திலும், அவர்களிடையே ஆண் குழந்தை பிறந்தால் முதலில் அதன் கையில் ஆமணக்கின் கொம்பால் வில்லொன்று செய்து, அதன் இலை நரம்பு கொண்டு அம்பு செய்து கொடுப்பது ஒரு சடங்காக நடைபெறுகிறது[1]. ஆண் மக்கள் இறந்து போவராயின், அவர்களைப் புதைக்குங்கால், அவர்களது உடம்போடே அம்பு ஒன்றையும் உடன் கிடத்தி புதைக்கின்றனர்[2]. இவ்வில்லோர்க்குத் தலைவனாதலால், பிட்டங்கொற்றனைச் சான்றோர் “ஊராக் குதிரைக் கிழவன், வில்லோர் பெருமகன்” எனச் சிறப்பித்தனர்.


  1. Imp. Gazett.Mys.& Coorg.p.299.
  2. Malabar. Series. Wynad.p.62.