பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமான் குட்டுவன் கோதை 359


 அவர்களை மிக எளிதில் வெருட்டி அவர்களது குறும்பை அடக்கினான். அவர் செய்த குறும்புகளால் அலைப்புண்ட நாட்டைச் சீர் செய்து கெட்ட குடிகளைப் பண்டு போல் நிலைபெறச் செய்தற்குப் பிட்டன் சில நாள்கள் கொங்குநாட்டில் தங்க வேண்டியவனானான். அங்கே காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் சான்றோர் அவனைக் காணச் சென்றார். அப்போது அவன் பகைவரை அடக்கும் செயலில் ஈடுபட்டிருந்தான். அவன் வினை முடித்து மீளுந்தனையும் அவன் இருந்த பெருமனைக் கண் தங்கினார். அவன் வெற்றியோடு திரும்பி வரவும் அவர் பெருமகிழ்ச்சி கொண்டு பாடினார். அப்போது, அவனது பார்வை, தன்னை அவர் போர்வினை இடத்தேயே கண்டிருக்கலாம் என்ற குறிப்பைப் புலப்படுத்திற்று. அதனை உணர்ந்தார் கண்ணனார்;

“பெரும், போர்வினையிடத்தும் நின் செவ்வி கிடைப்பது அரிதாகவுளது. போர்க்களத்தில் பகைவர் எறிதற்கு மேற்செல்லும் நின் வேற்படை வீரரை முன்னின்று நடத்துகின்றாய்; பகைவரது விற்படை எதிர்த்து மேல்வருங்கால் காட்டாற்றின் குறுக்கே நின்று அதன் கடுமையைத் தடுத்து நிறுத்தும் கற்சிறை போல அப் படையைக் குறுக்கிட்டுத் தடுத்து மேன்மை யுறுகின்றாய்; ஆகவே எவ் வழியும் நினது செவ்வி பெறுவது எம்மனோர்க்கு அரிது; செவ்வியும் இப்போதே கிடைத்தது. இதுகாறும் தாழ்த்தமையால் என் சுற்றத்தார் பசி மிகுந்து வருந்துகின்றனர்; எனக்கு இப்போதே