பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் கணைக்கால் இரும்பொறை 371



செங்கணானது சிறை வீட்டாணை உறையூரி லிருந்து குடவாயிற் கோட்டம் சென்று சேருமுன், அங்கே வேறொரு செய்தி நிகழ்ந்தது. சிறையிலிருந்த சேரமான் சிறைக் காவலரைச் சிறிது நீர் கொணர்ந்து தருமாறு பணித்தான். அவர்கள் அவனது ஆணையை மதியாது சிறிது தாழ்த்துக் கொணர்ந்து தந்தனர். மானமிக்க வேந்தனாகிய சேரமானுக்கு அவரது செயல் பெருவருத்தத்தை யுண்டுபண்ணிற்று. அவன் நெஞ்சு சுழலத் தொடங்கிற்று; பற்பல எண்ணங்கள் தோன்றின. வீரமும் மானமும் வீறுகொண்டெழுந்தன; “குழவி இறப்பினும் ஊன் தடி பிறந்தாலும் இவை வாள் வாய்ப்பட்டு இறந்தாலன்றி மறக்குடிப் பிறந்தார்கக்கு மாண்பு அன்று எனக் கருதி எம்மனோர் அவற்றையும் வாளாற் போழ்ந்து அடக்கம் செய்வர். அவர் வயிற்றிற் பிறந்த யான் நாய் போற் பகைவர் சங்கிலியாற் கட்டுண்டு சிறையிற் கிடப்பது தீது; அதன் மேலும் தம்மை மதியாத பகைவர்பால் தமது வயிற்றுத் தீயைத் தணித்தற் பொருட்டு கண்ணீர் இரந்துண்ணுமாறு மக்களைப் பெறுவாரோ எம் பெற்றோர்? ஒருகாலும் பெறார்காண் என அஃதொரு பாட்டாய் வெளிவந்தது. அதனை ஓர் ஓலை நறுக்கில் எழுதிப்படித்தான்[1]; கண்களில் நீர் துளித்தது; உடல் ஒருபால் துடித்தது. உயிரும் உடலின் நீங்கி ஒளித்தது.

சிறிது போதிற்கெல்லாம் அரசியற் சுற்றத்தாரும் பொய்கையாரும் வந்தனர்; உயிர் நீங்கிய சேரமான்


  1. புறம். 74.