பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376 சேர மன்னர் வரலாறு



“பெண்டிரும்,
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே[1]

என்றும் பாடி வருந்தியுள்ளார்.

பரணர் என்னும் சான்றோர், அவர்களுடைய வீழ்ச்சி கண்டு மன நோய் மிகுந்து, யானைப்படை; குதிரைப்படை, காலாட்படை யாவும் வீழ்ந்தது கூறி, அரசர் இருவரும் வீழ்ந்த நிலையை,

“சாந்தமை மார்பில் நெடுவேல் பாய்ந்தென,
வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர்”

என்று எடுத்துரைத்தார். அப்போது அவர்களை இழந்த நாடுகளின் நலத்தை எண்ணி, அவர்களுடைய நல்லரசால் நல்வாழ்வு பெற்று இனிதிருந்த நாடு என்னாகுமோ? என ஏங்கி,

"இனியே
என்னா வதுகொல் தானே கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கித் தண்புனல் பாயும்
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே”[2]

எனக் கையறுகின்றார்.

பெருஞ்சேரலாதன்: சேரமான் பெருஞ்சேரலாதன் பெயர் சில ஏடுகளில் பெருந்தோள் ஆதன் எனவும் காணப்படுகிறது. இவன் காலத்தே சோழநாட்டில்


  1. புறம். 62
  2. புறம். 63.