பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382 சேர மன்னர் வரலாறு



இங்ஙனம் சிந்திக்குமிடத்துச் சிறந்து செந்தேன் முந்திப் பொழியும் முழுநலம் அமைந்த சொற்களைத் தொடுத்துப் பாடும் இச் சேரமான் பாடல் உள்ளுதோறும் உள்ளம் இனிக்கும் உயர்வமைந்ததாகும்.

சேரமான் இளங்குட்டுவன்: இச் சேரமானுடைய பெயரை நோக்கும் போதே இவன் குட்டநாட்டு அரசர் குடிகள் ஒன்றில் தோன்றியவன் என்பதை அது காட்டிவிடுகிறது. இவனைப் பற்றி அரசியல் குறிப்பொன்றும் இதுகாறும் கிடைக்கவில்லை. இளங்கடுங்கோ, இளஞ்சேரல், இரும்பொறையென்றாற் போலச் சேரமன்னர் நிரலுள் இவன் இளங்குட்டுவன் எனப்படுகின்றான் தான் தோன்றிய குட்டுவர் குடியில் இவன் இளைய னாதல் பற்றி இவனை இளங்குட்டுவன் என்றனர். இவன் பாடிய பாலைப் பாட்டு ஒன்று அகநானூற்றில் உளது. வேறே இவன் பாடிய பாட்டுகளும் இல்லை.

காதலொழுக்கம் பூண்ட, பண்புடைய இளையர் இருவர் இடையே ஒருவரை யொருவர் இன்றியமையாத காதலன்பு மிகுந்தது. காதலியை மணந்து கோடற்குரிய முயற்சியில் காதலன் ஈடுபட்டிருக்கையில், வேற்றவர் மணப் பேச்சும் பெற்றோர் மகள் மறுப்பர் என்ற குறிப்பும் முற்பட்டெழுந்தன. காதல் மகளின் கற்பறம் அறியாத பெற்றோர் பால் இருந்து அறம் கெடுதலை விரும்பாத அவள், பெற்றோர் செயலைத் தன் காதலனுக்கு உணர்த்துகிறான். கற்பறம் காத்தற்கண் மணமாகு முன்னே காதலனுடன் தனிமையில் உடன்போதலைக் கற்புடைய பெண்ணுக்கு அறமாம் என்பது தமிழ் நூலோர் முடிபு. அதனால் ஒருநாள் இரவில் யாவர்