பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர நாடு 37



பேரினங்கள் வாழ்கின்றன; அவற்றால் அங்கு வாழும் மக்கட்கும் விலங்குகட்கும் உயிர்கேடு உண்டாவது இயல்பு.

தென் கன்னட மாவட்டத்துக்கும் மைசூர் நாட்டுக்கும் எல்லையாய் நிற்கும் மலைத்தொடரில் உள்ள முடிகளுள் ஒன்று குதிரை மலை யென்பது. இதன் உயரம் 6215 அடி : இதனை இப்போது சஞ்ச பருவதம் (சம்ச பருவதம்) என வடமொழியாளர் வழங்குவராயினும், பண்டைத் தமிழகத்துக்கு உரியதென உரிமை காட்டும், தமிழ்ப் பெயரைக் கைவிடாது அங்கு வாழும் பொது மக்கள் குதிரை மூக்கு மலை (Gudramukh) என்றே வழங்குகின்றார்கள். இதன் மேற் பொழியும் மழைநீர் ஒருபால் கிருட்டினையாற்றையும் ஒருபால் காவிரி யாற்றையும் அடைகிறது. கடலிலிருந்து காண்போர்க்கு இது குதிரை முகம் போல் காட்சியளித்தலால் இப் பெயர் பெறுவதாயிற்று.[1]

தென்னம் பொருப்பு எனப்படும் தென்மலைத் தொடர் 200கல் நீளமுள்ளது; இது கொங்கு நாட்டிற்கும் பாண்டி நாட்டிற்கும் மேலெல்லையாய் நிற்கிறது. இதன்கட் காணப்படும் முடிகளுள் திருவிதாங்கூர் நாட்டுக் கோட்டையம் பகுதியில் நேரிமலையும் அயிரைமலையும் பேரியாற்றின் கரையில் நிற்கின்றன. கொச்சி நாட்டை அடுத்து வடகீழ்ப் பகுதியில் நிற்கும் நெல்லியம்பதி மலைகளுள் பாதகிரி என்பது ஒன்று; இதனை மிதியாமலா என்றும் மியான்முடி யென்றும்


  1. Imp. Gezet. Mysore & Coorg P. 233 & 109