பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடிப்புரை 393



விளையாட்டயர்வர் என்றது மகளிர் விளையாட்டு ஒன்றையே கருதி அடும்பின் பூக்களை அலைப்பது போல நம் தலைவன் நான் மேற்கொண்ட வினையும் பொருளுமே கருதி என்னைப் பிரிந்து வருந்துகின்றான், இதனை நீ அறியவில்லையோ?'’ என்ற கருத்து ஒன்று பொதிந்து கிடப்பதைக் காணலாம்.

மருதம் பாடிய இளங்கடுங்கோ: குட்டுவர், பொறையர் என்ற சேரர் குடிகள் தேய்ந்தபின் கடுங்கோக்குடி வகையில் தோன்றி நல்லிசைப் புலமையுலகில் சிறந்து பாலைப் பாட்டுகள் பாடிப் புகழ் பரப்பி வாழ்ந்த பெருங் கடுங்கோவக்குப் பின்பு அக் குடியில் இந்த இளங்கடுங்கோ புலமையுலகில் தோன்றுகின்றார். இவர் மருதத் திணைக்குரிய பாட்டுகள் பாடியதனால் மருதம் பாடிய இளங்கடுங்கோ எனப்படுகின்றார். பெருங்கடுக் கோவின் பாட்டுகளைப் போல இவர் பாடியனவாக அகத்தில் இரண்டும் நற்றிணையில் ஒன்றுமே கிடைத்துள்ளன.

சோழ நாட்டில் வாழ்ந்த வேளிர் குடியில் அஃதை என்பவள் தோன்றி உரு நலத்தால் உயர்ந்து விளங்கினாள். அவளை மணக்க விரும்பிப் பாண்டியர் குடியிலும் சேரர் குடியிலும் தோன்றிய செல்வர்கள் அவள் தந்தையை அணுகினர். அந் நாளில் அவர்களது நிலை தாழ்ந்து இருந்த காரணத்தாலோ எதனாலோ அவன் மகள் மறுத்தான். அதனால் இருவரும் சேர்ந்து அஃதை தந்தையொடு போர் தொடுத்தனர். அவனுக்குத் துணையாகச் சோழ வேந்தன் நின்று போர் செய்தான்; அப் போர் சோழநாட்டுப் பருவூரில் நடைபெற்றது.