பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394 சேர மன்னர் வரலாறு



சேர பாண்டியர் குடித் தோன்றல்கள் போர்ப் பரிசு அழிந்து தோற்றோடினர். தோற்ற வேந்தரின் யானைகளைச் சோழர் கைப்பற்றிய போது, அங்கு உண்டான ஆரவாரம் தமிழகம் முற்றும் பரவி, இருபெரும் வேந்தர் குடிக்கும் இளிவரலைப் பயந்தது. சேர பாண்டிய செல்வர்களது செயலின் புன்மை கண்ட இந்த இளங்கடுங்கோவின் புலமையுள்ளம் வருந்திற்று. பரத்தைமை பூண்ட ஒருவன் தன் மனைவிக்கு வாயில் வேண்டி வந்தானாக, தோழி அவனுடைய மனைவி பக்கல் நின்று அவனை மறுக்கத் தொடங்கினாள். அப்போது அவள் வெகுண்டுரைக்கும், சொல்லின்கண் அச் செல்வர்கள் செயலை உவமமாக நிறுத்தி, “ஐய நீ இப்போது ஒரு பரத்தையைக் கைப்பற்றியுள்ளாய் எனப் பலரும் கூறுவர். அதனால் உண்டான அலர், அஃதை பொருட்டுப் போர் செய்து தோற்ற சேர பாண்டியரின் யானைகளைச் சோழர் கைக்கொண்ட போது எழுந்த ஆரவாரம் போல் ஊரெங்கும் பரவிவிட்டது; அதனை இனி மறைப்பதில் பயனில்லை” என்று எடுத்தோது கின்றான். அவ்வுரையில் தோற்றோடிய சேர பாண்டியர் இயற்பெயரைக் குறியாது குடிப்பழி மறைக்கும் இவரது செயல் இவருடைய மான மாண்பைக் காட்டுகிறது.

தலைமைக்கு இழுக்குத் தோன்றுதற்குக் காரணம் அவனது பரத்தைமையும் அதன்கண் அவனை உய்த்த பாணனுமாம் என்ற கருத்தைத் தமது பாட்டில் உய்த்துணர வைக்கும் இளங்கடுங்கோவின் புலமைத் திறம் நமக்கு இன்பம் தருகிறது.


1. நற். 50.