பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 சேர மன்னர் வரலாறு



கூறுவர். இதன் உயரம் 5200 அடி. இதன் அடியிலுள்ள நாட்டவர், குறு முனிவர் பொதிய மலைக்கு வந்தபோது அவருடைய செருப்படி அழுந்தியதனால் அம் முடி செருப்புப் போலாயிற்றென்றும், இது சித்தர் வாழிட மாதலால் யாரும் இதன் மேல் கால் வைத்து ஏறக் கூடா தென்பது பற்றி மிதியாமலையென இதற்குப் பெயரெய் திற்றென்றும் உரைக்கின்றனர். செருப்பென்பதன் பொதுமை நீக்கி மலையைச் சிறப்பாக உணர்த்தல் வேண்டிச் சங்கச் சான்றோர், “மிதியல் செருப்பு” என்றும், அது பூழி நாட்டுக்குரியதென்பது தோன்ற “மிதியல் செருப்பின் பூழியர்[1]” என்றும் இசைத்துள்ளனர்.

இச் சேரநாட்டு மேற்கு மலைத் தொடரில் தோன்றி இழிந்தோடும் ஆறுகள் பல. அவற்றுள், தமிழ்ச் சான்றோர் பரவும் புகழமைந்த பேராறுகளுள் காவிரியும் வையையும் தண்ணான் பொருநையும் பேரி யாறும் சிறப்புடையனவாம். இவற்றுட் காவிரியாறு, சேரரது குட நாட்டில் தோன்றித் தன்னைப்போல் தோன்றிவரும் ஏனைச் சிற்றாறுகளோடு கூடிக் கொங்கு நாடு கடந்து சோழ நாட்டிற் பாய்ந்து கடலிற் கலக்கும் சிறப்புடையது. இதனால் சோழநாடே பெரும்பயன் எய்துவது பற்றி, இது சோழர்க்குரியதாய் நிலவுகிறது; சோழ நாட்டுச் சோழ வேந்தரைப் பாடும் சான்றோர் காவிரிக்குச் சொன் மாலை சூட்டிச் சிறப்பிக்கின்றனர்; பாண்டியரது பாண்டி நாட்டு வையை யாறும் தென் மலையாளப் பொருப்பிலே தோன்றிப் பாண்டி நாட்டிற் படர்ந்து


  1. பதிற் 21.