பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர நாடு 41



கிளையாய்ப் பிரிகிறது. ஒரு கிளை ஆலப்புழையின் வடமேற்கில் சென்று அங்குள்ள காயலில் விழுகிறது; மற்றொன்று தெற்கில் வந்து பல கிளைகளாகப் பிரிந்து வீரப்புழைக் காயலிலும் திருப்பொருநைத் துறைக் காயலிலும் வீழ்ந்து விடுகிறது. வீரப்புழை வீரப்பொலி யெனவும் திருப்பொருநைத் துறை திருப்புனித்துறா எனவும் சிதைந்து வழங்குகின்றன. இதன் நீளம் 142 கல் என்று கணக்கிட்டுள்ளனர்[1].

கடலளவுக்கு 2800 அடி உயரத்தில் மலை முகட்டில் தோன்றி 60 கல் அளவு மலையிடையே நெளிந்து வளைந்து தவழ்ந்து தாவித் துள்ளிப் பரந்துவரும் பேரியாறு, அடர்ந்து படர்ந்து செறிந்து தழைத்து நிற்கும் பசுங்கானத்தால் திருமால் போல் இனிய காட்சி நல்கும். மேற்குமலைக் குவட்டில் அவன் மார்பிற் கிடந்து மிளிரும் முத்துமாலைபோல இனிய காட்சி நல்குகிறது. அதன் இரு கரையிலும் கோங்கமும் வேங்கையும் கொன்றையும் நாகமும் திலகமும் சந்தனமுமாகிய மரங்கள் வானளாவ ஓங்கி நிற்கின்றன. அவற்றின் பூக்களும் பசுந்தழைகளும் ஆற்றில் உதிர்ந்து அதன் நீரைப் புறத்தே தோன்றாதபடி மறைத்து விடுகின்றன. இவ்வியல்பை இளங்கோவடிகள்,

“கோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றை
நாகம் திலகம் நறுங்கா ழாரம்
உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து
மதுகரம் திமிறொடு வண்டினம் பாட
  1. 1.Nagam Iyer’s Travancore Manual Vol i P. 17-3.