பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 சேர மன்னர் வரலாறு


நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெருமலை விலங்கிய பேரியாறு[1]

என எடுத்தோதுகின்றார்.

இச் சேரநாட்டு மலைத்தொடரிற் பாலைக்காட்டுக் கணவாயின் வடக்கிலுள்ள வடமலைத் தொடரிலும் தெற்கில் ஆனைமலை முதலாகவுள்ள தென்மலைத் தொடரிலும் ஆறுகள் பல உண்டாகின்றன. அவற்றுள், வடமலைத் தொடர் 800 கல் நீளமுடையது. அதன்கண் தோன்றும் சிறப்புடைய ஆறுகளை வானி யென்றும், தென்மலைத் தொடரில் தோன்றும் சிறப்புடைய ஆறுகளைப் பொருநை யென்றும் பண்டைத் தமிழ்ச் சான்றோர் பெயரிட்டிருக்கின்றனர். தென் கன்னடம் மாவட்டத்திற்கும் வட கன்னடம் மாவட்டத்திற்கும் எல்லையாய்க் கிழக்கு மேற்காக ஓடிக் கடலில் கலக்கும் ஆறு வானியாறு எனப்படும்; இப்போது அது கன்னடரால் ஹோனவாறு என்றும் சாராவதி யென்றும் சிதைக்கப் பெற்றுள்ளது. ஹோனவாறு, இன்று சாராவதி யாறு கடலோடு கலக்கும் இடத்து நகரத்துக்குப் பெயரளவாய் நின்றுவிட்டது. ஆறு மாத்திரம், சேர, வாறென நின்று பின்பு சாராவதியாகி விட்டது. இவ் வடமலைத் தொடரின் தென்னிறுதியில் தோன்றும் பொன்வானி பாலைக் காட்டுக் கருகில் பாரதப் புழையுடன் கூடி, மேலைக் கடலில் பொன்வானி நகர்க் கன்மையில் கடலோடு கலக்கின்றது. இப் பொன்வானி இப்போது பொன்னானி எனச் சிதைந்து வழங்குகிறது.