பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர நாடு 43



வடமலைத் தொடரில் தோன்றிக் கிழக்கில் மைசூர் நாட்டில் ஓடிக் காவிரியோடு கலக்கும் ஆறு கீழ்ப்பூவானி யென்றும் உதகமண்டலத்தில் தோன்றிக் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓடிக் காவிரியோடு கலக்கும் ஆறு பூவானி யென்றும் பண்டைச் சான்றோரால் வழங்கப் பெற்றன. இப்போது அவை கெப்பானி (Kebbani) என்றும் பவானி யென்றும் மருவி நிலவுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் தாலூகாவில் இப் பூவானி யாற்றின் கரையில் பூவானி என்று பெயர் தாங்கிய ஊரொன்றிருப்பதும், அப் பகுதியை இடைக்காலக் கல்வெட்டுகள் பூவானி நாடெனக் குறிப்பதும் இம் முடிபுக்குச் சான்று பகர்கின்றன. கோயம்புத்தூர்க்கு உண்ணுநீர் நல்கும் ஆற்றுக்குச் சிறுவானி என்று பெயர்.

இவ் வடமலைத் தொடரில் தோன்றும் ஆறுகள் பலவும் வானியென்று பெயர் பெறுவதை நோக்கின், இம் மலைத் தொடர் வானமலை என்ற பெயர் கொண்டு ஒருகாலத்தே நிலவியிருந்த தென்பது நன்கு தெரிகிறது. இம் மலையின் வட பகுதியில் வானியாற்றின் கிழக்கில் உள்ள நாட்டுக்கு வானவாசி யென்று பெயர் கூறப்படுகிறது. அங்குள்ள அசோகன் கல்வெட்டுகள்[1] அதனை வானவாசி என்கின்றன. வாசி யென்பது பாசியென்னும் தமிழ்ச் சொல்லின் சிதைவு. பாசி, கிழக்கு என்னும் பொருளது; ஆகவே, வானவாசி வான மலைக்கும் கிழக்கிலுள்ளது என்றும், பொருள் படுமாறு


  1. L. Rice Mysore Voi i. P, 191.