பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 சேர மன்னர் வரலாறு



காணலாம். இவ் வடமலையின் தென்பகுதி பாயல் மலையென வழங்குமாயினும் பொதுவாக மேற்கில் கொண்கானத்துக்கும் கிழக்கில் வான வாசிக்கும் இடை நிற்கும் மலைநாடு, வான நாடென வழங்கின்மை தேற்றம்.

தென்மலைப் பகுதியில் தோன்றும் பேரியாற்றின் கிளையைப் பொருநை என்றும், அது கடலோடு கலக்குமிடத்திலுள்ள ஊர்க்குத் திருப்பொருநைத்துறை யென்றும், கிழக்கில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தாராபுரம் வழியாக ஓடிக் காவிரியோடு கலக்கும் ஆற்றுக்கு ஆன்பொருநையென்றும், திருநெல்வேலி வழியாக ஓடிக் கடலோடு கலக்கும் ஆற்றைத் தண்ணான் பொருநை யென்றும் பண்டையோர் பெயரிட்டுள்ளனர். அவற்றுள் திருப்பொருநைத்துறை திருப்புனித்துறா வானாற்போல், ஆன்பொருநை ஆம்பிராவதி யென்றும், அமராவதி யென்றும், தண்ணான் பொருநை தாம்பிரபரணி யென்றும் இப்போது மருவின் வாயினும், இப் பெயரளவே நோக்கின் பண்டைச் சேர நாட்டின் வட பகுதி வானவாசி நாடுவரையில் பரந்திருந்தமை இனிது தெளியப்படும்.


2. சேரநாட்டின் தொன்மை

சேர நாட்டின் தொன்மை நிலையை யுணர்வதற்குப் பண்டைநாளைச் சங்கத்தொகை நூல்கள் ஓரளவு துணை செய்கின்றன. இந் நூல்கள் பலவும் சான்றோர் பலர் அவ்வப்போது பாடிய பாட்டுகளின் தொகை யாதலால், அவற்றால் சேர வேந்தர்களையும் சேர நாட்டுக் குறுநிலத் தலைவர்களையும் முறைப்