பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர நாடு 45


படுத்திக் காண்பதற்குப் போதிய வாயில் இல்லை. அவற்றைப் பாடிய சான்றோரும் சேர நாட்டின் இயற்கை நிலையினையும் மக்கள் வாழ்க்கை முறையினையும் வரலாற்று முறையில் வைத்துக் கூறினாரில்லை. ஆயினும், இந்நூல்களால் சேர நாட்டு மலைகளிற் சிலவும் யாறுகளிற் சிலவும் ஊர்களிற் சிலவும் தெரிகின்றன. இந் நூல்களிலும் பதிற்றுப்பத்தும் புறநானூறும், சேர வேந்தர்களையும் சேர நாட்டையும் சில பல பாட்டு களில் சிறந்தெடுத்துக் கூறுகின்றன. சங்கத் தொகை நூல்களை நோக்கின் அவற்றுள் பல சேர மன்னரின் ஆதரவில் தொகுக்கப்பெற்றமை தெரிகிறது. ஏனையவை ஆங்காங்குச் சிற்சில குறிப்புகளையே வழங்குகின்றன.

இச் சங்கத் தொகை நூல்களை அடுத்துப் பின்னர்த் தோன்றிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சேர நாட்டைப்பற்றிச் சிறிது விரியக் கூறுகின்றன. இவ்விரண்டன் ஆசிரியர்களும் சேர நாட்டவராதலால் அவர் கூறுவன நமது ஆராய்ச்சிக்குத் துணையாகின்றன. ஆயினும்! அவை கிறித்துவுக்குப் பிற்பட்ட காலத்தன. கிறித்து பிறப்பதற்கு முன்னைய காலத்தேயே நம் தென் தமிழ்நாடு சிறந்து விளங்கியதாகலின், அக் காலத்து நிலையை விளக்குதற்கு இந்த இரு நூல்களும் நிரம்புவனவாகா. ஆகவே, சிறித்துவுக்கு முற்பட்ட காலத்து வரலாற்றுக் குறிப்புகள் கிடைப்பின் அவற்றை ஆராய வேண்டியது கடனாகிறது.

கிறித்துவுக்கு முன் தோன்றிய நூல்கள் தொல் காப்பியமும் சங்கத் தொகை நூற்களிற் காணப்படும் பாட்டுகளுட் சிலவுமேயாம். தொல்காப்பிய நூலின்