பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை


லக வாழ்வு வளம் பெறுதற்கு அதன் தொன்மை வரலாறு இன்றியமையாதது. முன்னோர் வாழ்வில் காணப்படும் உயர்ச்சியும் வீழ்ச்சியும், ஆக்கமும் கேடும், நிறையும் குறையும் பின்னோர்க்கு ஆக்கமும் அரணுமாம். நம் நாட்டில் சங்க இலக்கியங்கட்குப்பின் தோன்றியவை யாவும் விண்ணவர் தேவர் அசுரர் வாழ்வையும் பெருமைகளையும் கற்பனையால் விரித்துக் கூறி, மண்ணவர் வாழ்வையும் வரலாற்றையும் அறவே புறக்கணித்து விட்டன. அதனால் நாம் வாழும் வீட்டைச் சுற்றிலுமுள்ள புல் பூடுகள், மரஞ் செடிகள், புழு பூச்சிகள், புள்ளினங்கள் முதலிய பலவற்றின் பெயர் கூடத் தெரியாமல் இருக்கிறோம். நமது குடும்ப வரலாறு, நாம் வாழும் ஊர் வரலாறு, நாட்டு வரலாறு ஒன்றும் நமக்குத் தெரியாது. தேவாசுரர், முகமதிய ஆங்கிலர் வரலாறுகள் ஓரளவு தெரியுமே தவிர, நம் முன்னோரான குடும்பத் தலைவர், அரசர், செல்வர், பெரியோர் வரலாறும் செயல்வகையும் அறியாமைதான் நமது சமுதாய பொருளாதாரச் சமய வீழ்ச்சிக்குக் காரணம். இவ்வரலாறுகளை வெளியிடும் நோக்கத்தால் இவ்வரலாற்று நூலை வெளியிடுகிறோம். இதனை இதுகாறும் ஆதரித்த அறிஞர் உலகம் தொடர்ந்து ஊக்கம் உறுவிக்கும் என நம்புகின்றோம்.


பதிப்பகத்தார்.