பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48 சேர மன்னர் வரலாறு



வேந்தர் குலத்தை வேரறுத்து வந்த பரசுராமன் புதிதாக நாடொன்றும் படைக்க விரும்பித் தன் தவ வண்மையாற் கடலிலிருந்து மலையாள நாட்டை வெளிப்படுத்தி அதன்கண் பிராமணர்களை வாழச் செய்தான்[1]; அவர்கட்குச் சில காலத்துக்குப் பின் நாகர்களால் பெருந் துன்பமுண்டாயிற்று. அதனால் அவர்கள் அனைவரும் அந் நாட்டினின்றும் போய் விட்டனர். பின்னர்ப் பரசுராமன் வடக்கில் உள்ள ஆரிய நாட்டில் அறுபத்து நான்கு ஊர்களில் வாழ்ந்த பிராமணர்களைக் கொணர்ந்து குடியேற்றினான்; நாகர்களின் இடுக்கண் நீங்க நாக வழிபடும் நாகர்கட்குக் கோயில்களும் ஏற்படுத்தினான். அச் செயல்களால் நாகர் துன்பம் குறைந்தது; அதனை யறிந்த பழைய பிராமணர்கள் தங்களைப் பழந் துளுவரென்றும் துளு பிராமணர்களென்றும் கூறிக்கொண்டு திரும்பி வந்தனர். பரசுராமன் அவர்கட்கு நாகரது இடுக்கண் பற்றறத் தொலையும் பொருட்டு மந்திரங்கள் கற்பித்துக் கோயில் களிற் பணிபுரியுமாறு ஏற்பாடு செய்தான். மருமக்கள் தாய முறையை முதற்கண் ஏற்படுத்தியவனும் பரசுராமனே என்பர்.

சில காலத்துக்குப் பின் அப் பிராமணர்கட் கிடையே மனப்புழுக்கமும் பூசலுமுண்டாக, நான்கு


  1. பரசுராமன் நாடுபெற்ற இச் செய்தியைச் சேக்கிழாரும் மலைநாட்டைக் கூறுமிடத்து, “பாசுபெறு மாதவ முனிவன் பரசுராமன் பெறு நாடு” (விறன்மிண்டர். 1.) என்று குறிப்பது ஈண்டு நினைவு கூரத் தக்கது. இன்றும் அந் நாட்டு வேதியர் சங்கல்பம் கூறுமிடத்து, “பரசுராம க்ஷேத்ரே” என்று சொல்வது வழக்கமாகவுளது.