பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 சேர மன்னர் வரலாறு


யொன்று நிறுவி வேதியர்கட்குக் கல்வி வழங்கினான். அவன் பதினெட்டியாண்டு அரசுபுரிந்திருந்து திருவஞ்சைக்களத்தினின்றும் உடலோடே துறக்கம் புகுந்தான்.

இந் நிகழ்ச்சிக்குப் பின் கேரளநாடு அரசர்களின்றிக் குடியரசாய் நெடுங்காலம் இருந்து வந்தது. ஊராட்சியையும் நாட்டாட்சியையும் “பருடையார் மூல பருடையார்” என்னும் மக்கட் கூட்டத்தார் ஆட்சி செய்து வந்தனர். ஒருகால் இவர்களிடையே கருத்து வேறுபாடு உண்டாகவே, ஆனைகுண்டி கிருஷ்ண ராயரை வேண்டித் தமக்கோர் அரசனை நல்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர், ஒரு “க்ஷத்திரியனை”ச் சேரமான் பெருமாளாய் ஆட்சி செய்யுமாறு அனுப்பினார். அவன் பன்னிரண்டாண்டு இனிய ஆட்சி செய்ததனால், மேலும் இரு முறை அவனே சேரமான் பெருமாளாய் ஆட்சி நடத்தும் அமைதி பெற்றான். அந்த நாளில் கிருஷராயர் மலையாள நாட்டின் மேற் போர் தொடுக்கலுற்றார். அதனை யறிந்த சேரமான், அவரோடு பொருது முதற்கண் தோல்வி யெய்தினும் மறுமுறை வெற்றி பெற்றான். பின்பு சங்கராச்சாரியர் தோன்றிக் கேரள நாட்டு வரலாற்றை யெழுதியதோடு பிராமணர்களுக்கு ஒழுக்க நெறிகள் பல ஏற்படுத்தி நல்வழிப் படுத்தினார். முடிவில் இச் சேரமானும் மெக்காவுக்குப் போனான் என்று கேரளோற்பத்தி கூறுகிறது.

இக்காலத்தே கேரள நாட்டின் புறத்தில் பாண்டி நாடும் கொங்கு நாடும் துளுநாடும் வயநாடும் புன்னாடும் இருந்தன. இச் சேரமான் கேரளத்தை