பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 சேர மன்னர் வரலாறு



வடமொழி நூலும் கேரளோற்பத்தி கூறியதையே சிறிது வகுத்தும் விரித்தும் உரைக்கின்றதேயன்றிப் புதுவதாக ஒன்றும் கூறவில்லை. இதன் இடையிடையே வேதியர் கட்கு உள்ள சிறப்பும் நாட்டு வாழ்க்கையில் அவர்கட் கிருந்த உரிமையும் செல்வாக்கும் நன்கு விரித்துக் கூறப்படுகின்றன. இவற்றையெல்லாம் நன்கு ஆராயந் மேனாட்டு ஆங்கிலேயரான வில்லியம் லோகன் (William Logan), உண்மைக்கு மாறாகப் பொய் நிறைந்த கதை செறிந்த இந் நூல்களை இந் நாட்டு வேதியர்கள் தங்கள் நலமே பெரிதும் பாதுகாக்கப்பட்டு நிலை பெறும் பொருட்டு வெறிதே புனைந்துரையாக அமைத்துக் கொண்ட புளுகு மூட்டையென மனம் வெதும்பிக் கூறியிருக்கின்றார்[1]. வடநாட்டு அசோக மன்னனுடைய கல்வெட்டுகளும், “சோள பளய சத்தியபுத்திர கேரளபுத்திர தம்பபானி” என்று குறிக்கின்றன. இதனால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சேரநாடு கேரள நாடென வடவரால் வழங்கப் பெற்றதென்பது விளங்குகிறது

அக் காலத்தில் மேலை நாட்டிலிருந்து கிரேக்கர்களும் யவனர்களும் பாபிலோனிய நாட்டுக் கோசியர்களும் பிறரும் மேலைக் கடலில் கலஞ் செலுத்தி வரலாயினர். எகிப்து நாட்டு வேந்தர்கீழ் வாழ்ந்த போனீசியர்களே முதற்கண் அரபிக் கடலில் கலஞ் செலுத்தி நாடு காணும் நாட்டம் கொண்டனர். அவருடைய முயற்சி முற்றும் வாணிகம் செய்து


  1. W. Logan’s Malabar Manual. P. 246.