பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரநாட்டின் தொன்மை 57



அகஸ்டஸ் என்பாரது தொடர்பு பெற்றுச் சுபெயின் நாட்டுக்குச் சென்றது. இத் தூது தென் பாண்டி நாட்டு வேந்தனொருவன் விடுத்ததென்பர்; வட நாட்டுப் பேரரசு என்னும் வேந்தன் விடுத்தது என்பாரும் உளராயினும் அவர் கூற்று வலியுடையதாக இல்லை.

இவ்வாறு, மேலை நாட்டவர்க்கும் தென் தமிழ் நாட்டவர்க்கும் இடையே வாணிகம் மிகுதிப்பட்ட தனால் யவன நாட்டினின்று தமிழ் நாட்டுக்கு வரும் மரக்கல மாக்கட்கென யவன நாட்டில் நூல்கள் எழுந்தன. அவற்றுள் எரித்திரையன் கடற் செலவு, மத்தியதரைக் கடற் செலவு என்று பெயரிய இரு நூல்கள் உண்டாயின. ஒன்று ஆசிய நாட்டுக் கடற் செலவையும் மற்றொன்று ஆப்பிரிக்க நாட்டுக் கடற் செலவையும் கூறுவன[1]. இவை கி.மு. முதல் நூற்றாண்டில் தோன்றின் என்பது அறிஞர் கொள்கை. இக்காலத்துக்கு முன்பே தென் தமிழ் நாட்டவர் சிலர் ஐரோப்பாவைச் சுற்றிச் சென்று வட கடலில் சர்மனி நாட்டருகில் உடைகலப் பட்டொழிந்தனர் என்றொரு செய்தி அவருடைய நூல்களிற் காணப்படுகிறது என அறிஞர்கள் உரைக்கின்றனர்[2]. கி.பி. முதல் நூற்றாண்டில் பிளினி (Pliny) என்பார் மேலைக் கடற் செலவுப்பற்றி நூலொன்றை எழுதியுள்ளனர். அதன்கண் இக் கடற் செல்வு சார்பான செய்திகள் பல விரிவாக உரைக்கப்பட்டுள்ளன.


  1. W. Woodburn Hyde’s Ancient Greek Mariners P. 215-32, 209-14;
  2. W. L. Malabar P. 252