பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 சேர மன்னர் வரலாறு



கி.பி. 226 அளவில் எழுதப்பட்டதெனப்படும் பியூதிங்கள் தொகை நூல் (Peutingar Tables), முசிறியில் யவனர் இருக்கை யொன்று இருந்த தெனவும், அங்கே அகஃடசுக்குக் கோயிலொன்று இருந்ததாகவும், அதனை யவனப்படை யிரண்டு இருந்து காத்தவந்தன எனவும் கூறுகிறது; ஆனால் முசிறி நகரைக் குறிக்கும் சங்கப் பாட்டுகள் இச் செய்தி குறித்து ஒன்றும் கூறவில்லை. இவற்றை நோக்குவோர் முசிறியில் யவனர் அகஃடசுக்குக் கோயிலெடுத்த காலம் சங்கத்தொகை நூல்கள் தோன்றிய காலத்துக்குப் பின்னதாம் என்பதைத் தெளிவாகக் காண்பர். ஆகவே, சங்கத் தொகை நூல்கள் பலவும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டன என்பது தேற்றமாம்.

இச் சங்க இலக்கியங்கள் யாவும் சேர நாட்டைச் சேர நாடென்றும், அந் நாட்டு வேந்தர்களைச் சேரர் என்றும் சேரலரென்றும் தெளிவாகக் கூறுகின்றன பிற்காலத்துத் தமிழ் நூல்களும் அந் நெறியில் வழுவியது இல்லை. வடநாட்டு வடமொழி நூல்களுள் வேதங்களும் இதிகாசங்களும் சேரர்களைச் சேரரென்றே குறிப்பதை முன்பே கண்டோம். செல்யூக்சு நிகேடர் காலத்து மெகஃதனிசு என்பார் கங்கைக்கரைப் பாடலிபுரத்திலிருந்து எழுதிய குறிப்பும் சேரர்களைச் சேரமான்கள் என்றே குறித்துள்ளது. ஆனால் அசோக மன்னனுடைய கல்வெட்டுகள் சேரலர்களைக் கேரளபுரத்திரர் என்று கூறுகின்றன; ஆயினும் அத் தொடர் சேரல புத்திரர் என்று படிக்குமாறும் அமைந்திருக்கிறது. மற்று,